நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை


  எவன் ஆலவாயிடை வந்த அமுதவாய் உடையன் என இயம்பப்பெற்றோன்
          எவன் பண்டைப் பனுவல் பல இறவாது நிலவ உரை எழுதி ஈந்தோன்
          எவன் பரம உபகாரி எவன் நச்சினார்க்கினியன் எனும் பேராளன்
          அவன் பாதம் இருபோதும் எப்போதும் மலர்க எனது அகத்து மன்னோ.
                                                                             - உ.வே. சாமிநாதையர்
முன்னுரை
          தமிழ்மொழியின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்கியத் தொகுப்பினுள் அடங்கிய பத்துப்பாட்டு, கலித்தொகை என்னும் இரு தொகுப்பு நூல்கள், இடைக்காலத்தில் தோன்றிய காப்பியமான சீவக சிந்தாமணி ஆகிய நூல்களுக்கு உரை செய்ததன்வழித் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை உரை எழுதும் செயல்பாட்டிலேயே செலவிட்டுத் தன்னை ஒரு பெரும் புலமையாளராக அடையாளப்படுத்திக்கொண்டவர் நச்சினார்க்கினியர். தனது உரைச்செயல்பாட்டின் காரணமாக ‘உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’ என்று ஒருபுறம் அவர் சிறப்பிக்கப்பெற்றாலும், மறுபுறம் ‘மாட்டு’ என்னும் செய்யுள் உறுப்பினைப் பயன்படுத்திப் பத்துப்பாட்டிற்கு அவர் செய்த உரை கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட தன்மையினையும் காணமுடிகிறது. இலக்கணம், இலக்கியம், காப்பியம் என வெவ்வேறுபட்ட பனுவல்களுக்கு உரைசெய்த ஒரு உரையாசிரியரை அவர் செய்த குறிப்பிட்ட ஒரு உரையை மட்டும் முன்னிருத்தி விமர்சிப்பது பொருத்தமுடையதாகாது. நச்சினார்க்கினியர் செய்த உரைகள் ஒவ்வொன்றையும் சீர்தூக்கிப் பார்ப்பது அவரது ஆளுமையை முழுவதுமாகப் புரிந்துகொள்ள உதவும். இந்நிலையிலே அவரது தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் அவர் மேற்கொண்ட புது விளக்கங்களை முன்வைத்து விவாதிக்கிறது இக்கட்டுரை. 

உரையமைப்பு
          நச்சினார்க்கினியரது தொல்காப்பியச் சொல்லதிகார உரையானது தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குக் கிடைத்துள்ள ஏனைய உரைகளைப் போன்று விருத்தியுரைக்குரிய பகுதிகளான கருத்துரை, பொழிப்புரை, எடுத்துக்காட்டு, அகலவுரை என அனைத்தையும் உள்ளடக்கியுள்ளமையைக் காணமுடிகிறது.

கருத்துரை
          கருத்துரையைப் பொறுத்த அளவில் ‘இது இன்னது கூறுகின்றது’ என்ற தன்மையில் நூல் முழுமைக்கும் ஒரே முறையில் நச்சினார்க்கினியரால் கருத்துரை அமைக்கப்பட்டுள்ளது.
          (எ-டு)         அவற்றுள்
                   இ ஈ ஆகும் ஐ ஆய் ஆகும் (சொல். 123)
என்னும் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரை பின்வருமாறு அமைகிறது

          இஃது, இகர ஈறும் ஐகார ஈறும் விளி ஏற்குமாறு கூறுகின்றது.   (சொல். 123)

பொழிப்புரை
நூற்பாக்களின் அடிகளை எடுத்தெழுதி பொழிப்புரை தரும் நச்சினார்க்கினியர் இம்முறையை அனைத்து நூற்பாக்களுக்குமான பொழிப்புரைப் பகுதியிலும் கையாண்டிருக்கிறார்.
          (எ-டு) அவற்றுள் -- முற்கூறிய நான்கு ஈற்றுப் பெயருள், இ ஈ ஆகும் - இகர ஈற்றுப்பெயர் ஈகாரமாயும், ஐ ஆய் - ஐகார ஈற்றுப்பெயர் ஆய் ஆயும் ஈறு திரிந்து விளி ஏற்கும்.     (சொல். 123)
          மேற்கண்ட அதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் எழுதிய பொழிப்புரையாகும்.

எடுத்துக்காட்டு
          பதினெண்மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், அறநெறிச்சாரம் உள்ளிட்ட இலக்கியங்களிலிருந்தும் நன்னூல், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட இலக்கணங்களிலிருந்தும் நச்சினார்க்கினியரால் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.
அகலவுரை
          வினா விடை மூலம் விளக்கங்கள் (சொல். 9), பிற உரையாசிரியர்கள் கருத்துகளை மறுத்தல் ஏற்றல் (சொல். 24), நூற்பாக்களின் கிடைக்கை முறை சுட்டுதல் (சொல். 428),  மதம், அழகு, உத்தி இவற்றைப் பயன்படுத்தி விளக்குதல் (சொல். 11) முதலான அகலவுரையின் கூறுகளைப் பயன்படுத்தி உரை செய்துள்ளார் நச்சினார்க்கினியர்.

புது விளக்கம்
          நச்சினார்க்கினியர் தம் சொல்லதிகார உரையில் பல்வேறு விதங்களில் செய்த புது விளக்கங்களைப் பின்வருமாறு தொகுத்துச் சொல்லலாம்.

சொற்பொருளால் புது விளக்கம்
          சொல்லதிகாரத்தின் முதல் நூற்பா உரையில் சொல் என்பதற்கான நச்சினார்க்கினியரது விளக்கம் பின்வருமாறு அமைகிறது.
          சொல் என்றது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணை பொருட்டன்மையும் ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை. ஈண்டு ஆக்கப்படுதல் என்றது ஒரு சொல் கூறுமிடத்து ஓரெழுத்துப் போக ஓரெழுத்துக் கூறுவதல்லது ஒரு சொல்லாக முடியும் எழுத்தெல்லாம் சேரக்கூறல் ஆகாமையின் அவ்வெழுத்துக்கள் கூறிய அடைவே போயினவேனும் கேட்டோர் கருத்தின்கண் ஒரு தொடராய் நிலைபெற்று நின்று பொருளை அறிவுறுத்தலை. (சொல். 1, நச்சர்.)
          இவ்விளக்கத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கப்படுதல் என்னும் சொல்லிற்கு நச்சினார்க்கினியர் தந்துள்ள விளக்கம் சிந்திக்கும் வகையில் உள்ளது. காட்டாகத் தமிழ்நாடு என்னும் சொல்லை கூறும் போது ஒவ்வொரு எழுத்தாகத்தான் உச்சரிக்கிறோம் எனினும் அவ்வாறு உச்சரிக்கப்படும் எழுத்துகள் அனைத்தையும் ஒருசேர நினைவில் நிறுத்திக்கொண்டால் மட்டுமே அது ஒரு சொல்லாக நின்று பொருள் தரும். சொல்லுபவன் ஒவ்வொரு எழுத்தாகச் சேர்த்துச் சொல்ல அதனைக் கேட்பவன் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே நிறுத்தி ஒரு சொல்லாகப் பொருள் உணர்தலின் எழுத்தினான் ஆக்கப்படுவது சொல்லாயிற்று என்கிறார் நச்சினார்க்கினியர்.  
          இதற்கு மேலும் ஒரு உதாரணம் தந்து விளக்கலாம்.
                   பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்
                   ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவியும்,
                   தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவியும்,
                   'இவ்' என அறியும் அந்தம் தமக்கு இலவே;
                   உயர்திணை மருங்கின் பால் பிரிந்து இசைக்கும் (சொல். 4, சேனா.)
          ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின், ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி’ என்றது பேடியைக் குறிக்க வந்த தொடராகும் இத்தொடரால் குறிக்கப்பட்ட ‘பேடி’ என்னும் சொல்லும் ‘தெய்வம் சுட்டிய பெயர் நிலைக் கிளவி’ என்னும் தொடரால் குறிக்கப்பட்ட ‘தெய்வம்’ என்னும் சொல்லும் உயர்திணை முப்பலுக்கும் உரிய எழுத்துகளை பெற்றுவரும் என்கிறது இந்நூற்பா. 
          இந்நூற்பாவில் குறிக்கப்பட்ட ‘பெண்மை’ என்னும் சொல்லுக்குப் ‘பெண்மைத் தன்மை குறித்த’ எனச் சேனாவரையரும் ‘பெண்மை குறித்த’ எனத் தெய்வச்சிலையாரும் பொருள் தந்துள்ளனர். ஆனால் அதே ‘பெண்மை’ என்னும் சொல்லுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த பொருள் ‘பெண்பாற்குரிய அமைத்திதன்மை கருதிய’ என்பதாக அமைந்துள்ளது. (சொல். 4, நச்சர்.). இச்சொல் பயின்று வரும் பிற இடங்களிலும் (பெயரியல் நூற்பா எண்கள் 9 மற்றும் 10) இதே பொருளை எழுதியுள்ளார் நச்சினார்க்கினியர். பேடியைக் குறிக்க வந்த ‘பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின், ஆண்மை திரிந்த பெயர் நிலைக் கிளவி’ என்ற தொடரில் இடம்பெற்றுள்ள பெண்மை என்ற சொல்லுக்கு மற்ற உரையாசிரியர்கள் கொண்ட பொருளை விடவும் நச்சினார்க்கினியர் கொண்ட பொருளே இவ்விடத்தில் பொருந்திவருகிறது.

இலக்கணக் குறிப்பால் புது விளக்கம்
          உரையாசிரியர்கள் தாம் உரையெழுத எடுத்துக்கொண்ட மூல நூலில் இடம்பெறும் சொற்களின் பொருளைப் பொழிப்புரை பகுதியில் விளக்கிச்செல்வது போல, அச்சொற்களின் இலக்கண வகையைத் தேவைப்படும் இடங்களில் எல்லாம் குறித்துச் செல்வதுண்டு.  ஒன்றிற்கு மேற்பட்ட இலக்கண வகைப்பாட்டில் அடங்கும் சொற்கள் மூல நூலில் இடம்பெறும்போது. அச்சொற்களை உரையாசிரியர்கள் அனைவரும் ஒரே வகைப்பாட்ட்டில் அடக்குவர் எனக் கூற இயலாது. ஒவ்வொரு உரையாசிரியரும் தாம் கொள்ளும் கருத்து நிலைக்கு ஏற்ப அச்சொற்களின் இலக்கண வகை அமைத்துக்கொள்வர். இதன்வழித் தமக்குச் சாதகமான பொருளை அச்சொற்களுக்கு ஏற்றிக்கூறுவர். உரையாசிரியர் நச்சினார்க்கினியரும் தம் கருத்துநிலைக்கு ஏற்ப சில இடங்களில் இவ்வாறான செயலில் ஈடுபட்டு புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘மக்கட்சுட்டு’ என்னும் சொல்லுக்கு அவர் அமைக்கும் இலக்கண வகைய இதற்குச் சான்றாகக் கொள்ளலாம்.
          உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
          அஃறிணை என்மனார் அவரல பிறவே
          ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே.   (சொல். 1, சேனா.)
என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார முதல் நூற்பாவில் இடம்பெற்றிருக்கும் ‘மக்கட் சுட்டு’ என்னும் தொகைச் சொல்லைப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகக் கொண்டுள்ளார் சேனாவரையர். ‘மக்களாகிய சுட்டு யாதன்கண் நிகழும். அது மக்கட்ச் சுட்டு எனப் பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை’. (சொல். 1, சேனா.) என்பது சேனாவரையரது விளக்கம். சேனாவரயரது இவ்விளக்கம் முன்னுக்குப் பின் மாறுபாட்டுடன் அமைந்திருப்பதைக் காட்டி மறுக்கிறார் நச்சினார்க்கினியர். மக்கட் சுட்டு என்பதற்குச் சேனாவரையர் வரைந்திருக்கும் விளக்கத்தின் படி அதனை அவர் கூறுவதுபோல் பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாகக் கொள்ள முடியாது என்கிறார் நச்சினார்க்கினியர். அதாவது வெள்ளாடை என்னும் சொல்லில் வெண்மை என்னும் அடைமொழி அதனை அடுத்து நின்ற ஆடை என்பதனை விசேடித்து பின் இரண்டும் சேர்ந்து அவ்வாடையை உடுத்தாரை உணர்த்தி நிற்கும் இதுவே பண்புத்தொகை புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்றும் இதுபோலல்லாமல் மக்கட் சுட்டு என்பதில் மக்கள் என்னும் அடைமொழி சுட்டு என்னும் சொல்லை விசேடிக்காமல் அச்சுட்டினால் உணர்த்தப்ப்டும் ஆகுபெயர்ப் பொருளையே விசேடித்து நிற்கிறது. எனவே இது அன்மொழித்தொகை ஆகாது என்பது நச்சினார்க்கினியர் முன்வைக்கும் வாதம். மேலும் அவரே அச்சொல்லை மக்களாகிய சுட்டு என விரித்து இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகக் கொள்கிறார். நன்கு மதிப்பு என்னும் பொருள்தரும் சுட்டு என்னும் சொல் ஆகுபெயராய் மக்களை உணர்த்தி நிற்கிறது என்பது அவர் கருத்து. இங்கு நச்சினார்க்கினியர் தரும் விளக்கமே பொருந்துவதாகத் தோன்றுகிறது.

மேற்கோளால் புது விளக்கம்
          நச்சினார்க்கினியர் பன்னூல் பயின்ற புலமையாளர் என்பது அவர் உரை வரைய எடுத்துக்கொண்ட நூல்களின் எண்ணிக்கையால் நன்குப் புலனாகும். அவரது பன்னூல் பயிற்சி பல நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்வதற்குத் தோதாக அமைந்திருந்தது எனில் மிகையல்ல. காட்டாகப் பின்வரும் பகுதியைச் சொல்லலாம்.
                   எய்யா மையே அறியா மையே (சொல். 342, சேனா.)
என்னும் தொல்காப்பிய நூற்பா உரியியல் பகுதியில் அமைந்துள்ளது. இந்நூற்பா எய்யாமை என்னும் உரிச்சொல் அறியாமை என்னும் பொருளில் வரும் என கூறுகிறது. இந்நூற்பாவில் பொருள் விளக்கம் பெற்றுள்ள எய்யாமை என்னும் உரிச்சொல் எதிர்மறை வடிவத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. எனினும் எய்த்தல் என்றோ எய்தல் என்றோ இவ்வினைச்சொல்லுக்குரிய உடன்பாட்டு வடிவம் கிடைக்கவில்லை. இதனை உணர்ந்த சேனாவரையர் இந்நூற்பாவிற்கு உரை எழுதும்போது ‘இ-ள் எய்யா மையலை நீயும் வருந்துதி (குறிஞ்சிப்பாட்டு 8) என எய்யாமை அறிவின்மையாகிய குறிப்புணர்த்தும் எ-று’. அறிதற் பொருட்டாய் எய்தலென்றானும் எய்த்தலென்றானும் சான்றோர் செய்யுட்கண் வாராமையின் ‘எய்யாமை’ எதிர்மறை அன்மை அறிக.’ என எழுதியுள்ளார். 
          இதே நூற்பாவிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் ‘அறிதல் என்னும் உடன்பாட்டிற்கு (எதிர்)மறையாகிய அறியாமை என்னும் உரிச்சொல்லான் எய்யாமை உணர்த்தவே, அவ்வெய்யாமை (எதிர்)மறைச்சொல் என்பதூஉம், அதற்கு எய்த்தல் என்னும் உடன்பாட்டுச் சொல் உளது என்பதும் பெற்றாம். அவ்வுடன்பாடை ஓதாது (எதிர்)மறையை ஓதினார் (எதிர்)மறைச்சொல்லும் உரிச்சொல்லாய் வரும் என்றற்கு. ‘எய்த்து நீர்ச்சிலம்பின்குரை மேகலை’ (சீவக. - 2481) என்புழி எய்த்துஎன்பது அறிந்து என்னும் பொருள் உணர்த்திற்று.’ என எழுதியுள்ளார்.
          எய்யாமை என்பது எதிர்மறைச் சொல் அல்ல என்றும் அதற்கு எய்த்தல் என்றோ எய்தல் என்றோ உடன்பாட்டு வடிவம் சான்றோர் செய்யுளுள் இல்லை என்பதே சேனாவரையர் வாதம் ஆனால் நச்சினார்க்கினியர் அதனை தகுந்த காரண காரியத்துடன் மறுத்து மேற்கோள் ஒன்றின் துணையுடன் எய்யாமை எதிர்மறைச் சொல்லே என நிறுவியுள்ள விதம் அருமையானது.

மேற்கோளால் பாட நிர்ணயம்   
          மேற்சுட்டியவாறு மேற்கோளால் சொல்லின் உண்மை வடிவத்தை உணர வைத்தது போலவே மேற்கோளால் ஏற்ற பாடத்தை நிர்ணயம் செய்யும் பணியையும் செய்துள்ளார் நச்சினார்க்கினியர்.          
ஏற்றம் நினைவும் துணிவுமாகும். (சொல். 337, சேனா.)
என்னும் தொல்காப்பிய உரியியல் நூற்பாவில் இடம் பெற்றுள்ள முதல் சொல்லாக ‘ஏற்றம்’ என்னும் பாடத்தையே கொண்டுள்ளனர் உரையாசிரியர்கள் இளம்பூரணரும், சேனாவரையரும், தெய்வச்சிலையாரும். மாறாக நச்சினார்க்கினியரோ எற்றம் என்ற பாடத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். தாம் அவ்வாறு கொண்டமைக்கு அரணாகக், ‘கானலஞ் சேர்ப்பன் கொடுமை எற்றி’ (குறுந். 145) என்னும் குறுந்தொகைப் பாடலை மேற்கோளாகக் காட்டித் தன் கருத்தை நிறுவியுள்ளார் நச்சினார்க்கினியர்.

பெயர்க் காரணத்தால் புது விளக்கம்
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும். (சொல். 198, சேனா.)

மேற்கண்ட ‘வினையெனப்படுவது . . .’ என்ற நூற்பாவில் இடம்பெற்ற வினை என்ற சொல்லிற்குரிய எடுத்துக்காட்டுகளாக இளம்பூரணர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர் ஆகியோர் காட்டியிருப்பவை வினைமுற்றுகளே. இதன்வழி இவ்வுரையாசிரியர்கள் நால்வரும் வினை என்பதை வினைமுற்றாகக் கொண்டுள்ளமை புலனாகின்றது. மாறாக நச்சினார்க்கினியர் ஒருவரே இந்த இடத்தில் வினை என்பதை வினை முதல்நிலையாகக் (வினையடியாக) கொண்டுள்ளார். ‘வினை என்றது முதனிலையை. இஃது ஆகுபெயராய்த் தன்னான் பிறக்கின்ற சொல்லை உணர்த்திற்று
(எ-டு) உண், தின், கரு, செய் என்பன வினை. உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பன அம் முதல்நிலையான் பிறந்த வினைப்பெயர். உண்டான், தின்றான், கரியன், செய்யன் என்பன அம்முதல் நிலையான் பிறந்த வினைச்சொல். இங்ஙனம் வினையாற் பிறத்தலின் வினையியல் என்றார்’ (சொல். 200, நச்சர்.) என்றவாறு அமைந்த உரைப்பகுதி அவரது கருத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றது.
          வினையின் தொகுதி காலத் தியலும் (சொல். 415, சேனா.) என எச்சவியலுள் அமைந்த நூற்பாவிற்குச் சேனாவரையர் எழுதிய உரையும் நச்சினார்க்கினியரின் மேற்கண்ட கருத்துடன் பொருந்தி வருமாறு அமைந்துள்ளது. ‘ஈண்டு வினையென்றது எவற்றையெனின் வினைச்சொற்கும் வினைப்பெயர்க்கும் முதனிலையாய், உண், தின், செல், சொல் என வினைமாத்திரமுணர்த்தி நிற்பனவற்றையென்பது. இவற்றை வடநூலார் தாது வென்ப’ (சொல். 415, சேனா.) என்றவாறு எழுதியுள்ளார். எச்சவியலுள் வினைத்தொகை என்பதை விளக்கவந்த நூற்பாவில்தான் வினை என்றதை வினைமுதலாகச் சேனாவரையர் கொண்டுள்ளார். மாறாக நச்சினார்க்கினியர் போல வினையின் பொது இலக்கணத்தைக் குறிக்கவந்த நூற்பாவில் அவ்வுரையைச் சேனாவரையர் அமைக்கவில்லை. எனினும், சேனாவரையரும் நச்சினார்க்கினியரும் வினைமுதலை வினை என்றும் தொழிற்பெயரை வினைப்பெயர் என்றும் வினை விகற்பங்களை வினைச்சொல் என்றும் பகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.

உத்தியால் புது விளக்கம்
          மொழிபுணர் இயல்பு என்றும் தந்திரவுத்தி என்றும் தமிழ் இலக்கண நூல்களால் குறிக்கப்பட்ட உத்திகள் எண்ணிக்கையில் 32 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் 32 உத்திகளாகக் கொண்டனவற்றுள் தமிழ் இலக்கண நூல்கள் தம்முள் மாறுபடுகின்றன. நூல் ஒன்றை குறிப்பாக இலக்கண நூலை இயற்றப் பயன்படுத்தப்பட்ட இவ்வுத்திகளை இலக்கன உரையாசிரியர்கள் தங்கள் உரைச் செயல்பாட்டிற்கும் பயன்படுத்திக்கொண்டனர். மூல நூலாசிரியன் தொகுத்துச் சொன்ன செய்திகளை விரித்துரைக்க வேண்டிய இடங்களிலும் குறிப்பாகக் காட்டிய இடங்களைத் தெளிவாக விளக்குவதற்கும் உரையாசிரியர்களுக்கு பெரிதும் இவ்வுத்திகளே பயன்பட்டுள்ளன. நச்சினார்க்கினியர் அவ்வாறு ‘தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்’ என்னும் உத்தியைப் பயன்படுத்தி புது விளக்கம் செய்த பகுதி ஒன்றைச் சான்றாகப் பார்க்கலாம்.
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின் செயச் செயற்கென
அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி          (சொல். 228, சேனா.)
என்னும் நூற்பா வினையெச்ச வாய்ப்பாடுகள் இவை இவை எனத் தொகுத்துத் தந்துள்ளது. இந்நூற்பாவில் முதலில் சுட்டப்பட்டுள்ள ‘செய்து’ வாய்பாட்டு வினையெச்சமானது குற்றியலுகரத்தையும் (கடித்து, கொய்து, சென்று,) இகரத்தையும் (ஓடி, ஆடி, பேசி) ய் என்னும் மெய்யெழுத்தையும் (போய்) இறுதியாகக் கொண்டு முடியும். இவ்வாறு செய்து வாய்பாட்டு வினையெச்சம் வெவ்வேறு ஈற்றெழுத்துகளைப் பெற்றுவந்த போதிலும் அவை பொருண்மை அடிப்படையில் ‘செய்து’ என்னும் வாய்ப்பாட்டினுள் அடங்குபவையே என்னும் கருத்து நூற்பாவில் இல்லை. இக்கருத்தினைத் ‘தொகுத்தமொழியான் வகுத்தனர் கோடல்’ என்னும் உத்தியைப் பயன்படுத்தி விளக்கியுள்ளார் நச்சினார்க்கினியர். அவரது உரைப்பகுதி பிவருமாறு, செய்து என்பது இறந்தகாலம் பற்றி வருங்கால் குற்றுகரத்தான் ஊரப்பட்ட க, ட, த, ற என்னும் நான்கும் இகர ஈறும் யகர ஈறும் என அறுவகைத்து ஆமேனும் இகர ஈறும் யகர ஈறும் செய்து என்னும் வாசகத்தைத் தந்தே நிற்றலின் பொருண்மையான் ஒன்றாக அடக்கப்பட்டன’ (சொல். 230, நச்சர்.).

புறனடையால் புது விளக்கம்
          உத்திகளின் உதவியால் புதிய விளக்கங்களைத் தந்தது போலவே புறனடையாக அமையும் நூற்பாக்களுக்கு எழுதிய உரைகளின் வழியும் சில புதிய விளக்கங்களைத் தந்துள்ளார் நச்சினார்க்கினியர். குறிப்புவினைகள் தெரிநிலை வினைகள் போலவே மூவிடங்களிலும் இரு திணைகளிலும் இரு எண்களிலும் அமையும் பெயரெச்சமாகவும் வினையெச்சமாகவும் வரும்
(எ-டு) நான் நல்லேன்
          நாம் நல்லோம்
          நீ நல்லை
          நீயீர் நல்லீர்
          அவன் நல்லன்
          அவள் நல்லள்
          அவர் நல்லர்
          அது நன்று  
          அவை நல்ல
          நல்ல நூல்-  
          நன்று சொன்னாய்
இவ்விளக்கம் குறிப்பு வினை பற்றிய நூற்பாவின்கீழ் அமையவில்லை. மாறாகச் சொல்லதிகாரத்தின் இறுதி நூற்பாவான அதிகாரப் புறனடை நூற்பாவின்கீழ் தான் இவ்விளக்கம் நச்சினார்க்கினியரால் வழங்கப்பட்டுள்ளது. (சொல். 463)

இலக்கிய நயம் தோன்றும் உரை
இலக்கண உரைகளில் உரையாசிரியர்களால் காட்டப்படும் மேற்கோள் செய்யுள்களுக்கு சில இடங்களில் உரையாசிரியர்கள் பொருள் சொல்லிச் செல்வதும் உண்டு. அவ்வாறு உரையாசிரியர்கள் தாம் எடுத்தாண்ட மேற்கோள் செய்யுள்களுக்கு வரைந்த உரைகளை தனித்துத் தொகுத்துக் காண்பது அவர்கள் செய்யுள் ஒன்றை எந்த அளவிற்கு அனுபவித்து வாசித்துள்ளனர் என்பதை அறிவிக்கும். நச்சினார்க்கினியரும் அவ்வாறு தாம் மேற்கோளாக எடுத்தாண்ட செய்யுள் ஒன்றிற்கு இலக்கியம் நயம் தோன்றும் வண்ணம் உரை வரைந்துள்ளார். சொல்லதிகாரத்தின் இறுதி நூற்பா உரையில்
முரசு முழங்கு தானை மூவருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும       (புறம். 35: 4-5)
என்னும் புரநானூற்றுச் செய்யுள் அடியில் இடம்பெறும் மூவீர் என்னும் சொல் குறித்து அவர் வழங்கியுள்ள கருத்து எண்ணிப் பார்த்து வியக்கத்தக்கது. அதாவது புலவர் ஒருவர் அரசன் ஒருவனது முன்னிலையில் நின்று அவனைப் புகழ்ந்து பாடுகிறான் எவ்வாறெனில் முரசு முழங்கும் தானைகளை உடையை மூவருள்ளும் அரசன் எனச் சிறப்பிக்கப்படுபவன் நீயே என. இச்செய்யுளடியில் பயன்படுத்தப்பட்ட மூவருள்ளும் என்னும் சொல் படர்க்கைக்கு உரியது. புலவரோ அரசனது முன்னிலையில் இச்செய்யுளைப் பாடுகிறார். அவ்வாறெனில் மூவீருள்ளும் என அச்சொல் முன்னிலை இடத்திற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் என்பதே வழாநிலை. இதற்கு நல்லதொரு விளக்கத்தைத் தந்து அமைதிகாண்கிறார் நச்சினார்க்கினியர். அதாவது புலவர் மூவீர் என முன்னிலையில் குறிப்பிடாமல் மூவர் என படர்க்கையில் குறிப்பிட்டமைக்கான காரணம் என்னவெனில் தன் முன்னிருக்கும் இவ்வேந்தன் போக எஞ்சிய இரு வேந்தர்களும், தன் குலத்தில் தனக்கு முன்பாகத் தோன்றிய தன் முன்னோர்களும் இந்த அரசனுக்கு படர்க்கை இடமாதலால் இவனைத் தவிர்த்து அவர்களை நோக்கி மூவருள்ளும் என குறிப்பிட்டதாக நச்சினார்க்கினியர் விளக்கம்ளிக்கிறார். அவரது இந்த நயவுரைப் பகுதி பின்வருமாறு அமைகிறது: ‘மூவீர் என்னாதது என்னை? எனின், புலவன் கூறுகின்ற இவனை ஒழிந்த இருவகைக் குலத்தோரும் இவன் முன்னுள்ளோரும் படர்க்கையர் ஆதலின்’ (சொல். 463, நச்சர்.)

முடிவுரை
          சொல்லதிகார உரையுள் இவர் எடுத்தாண்டுள்ள மேற்கோள்களின் எண்ணிக்கை, பிற சொல்லதிகார உரையாசிரியர்கள் காட்டியுள்ள எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். இளம்பூரணரையும் சேனாவரையரையும் சில இடங்களில் தழுவியும் சில இடங்களில் மறுத்தும் வேறு சில இடங்களில் மறுக்காமல் புத்துரை கண்டும் அமைந்துள்ளது நச்சினார்க்கினியரது சொல்லதிகாரவுரை.
          ‘மாட்டு’ என்னும் செய்யுள் உறுப்பைப் பயன்படுத்திக் கொண்டுகூட்டிப் பொருள்கொள்ளும் நச்சினார்க்கினியரது தனித்த உரை முறையும், அவரது வைதீகச் சார்பும் தொல்காப்பியச் சொல்லதிகாரவுரையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.
          நச்சினார்க்கினியரது சொல்லதிகார உரையைமட்டும் கணக்கில் கொண்டால் அவரைத் தனித்த சிந்தனை மரபினராகக் காட்டத்தக்க  தனித்துவமிக்க கூறுகளை இனங்காண்பது சற்றுக் கடினமே ஆயினும். பிறர் எவரையும்விட அதிகமாக இலக்கிய மேற்கோள்களை இணைத்து உரைகூறும் தன்மை அவரது உரையின் தனிச்சிறப்பாக அமைகிறது.

துணை நின்ற நூல்கள்
1. அண்ணாமலை, மு., 1956. நச்சினார்க்கினியர், பழனி பிரசுரம், புதுக்கோட்டை.
2. குருசாமி, ச., 2007. நச்சினார்க்கினியர் உரைநெறி, இராணி பதிப்பகம், சென்னை.
3. சுந்தரமூர்த்தி, கு. (ப-ர்) 1962. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியர்     உரை, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை --       600 001.
4. சுந்தரமூர்த்தி, கு. (ப-ர்) 1996. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர்          உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்.






Comments

Popular posts from this blog

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)