கபிலர் தந்த அடைகள்



முன்னுரை
          குறிஞ்சித் திணையுடன் தன் மனதை முழுவதும் ஒன்றவைத்துப் பெற்ற உணர்வுகளைக் கவிதையாக வடித்தவர் கபிலர். குறிஞ்சித்திணையைக் காட்சிப்படுத்தும் கபிலரது கவித்துவம் குறிஞ்சிப்பாட்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது எனச் சொல்வதற்குச் சான்றுகள் தேடவேண்டியதில்லை. குறிஞ்சிப்பாட்டில், தோழியானவள் பாறைமேல் பரப்பிய பூக்களாகக் கபிலர் காட்டியவற்றின் எண்ணிக்கை தொண்ணூற்றொன்பது. அவற்றுள் அவரால் அடைகொடுக்கப்பட்ட பூக்களின் எண்ணிக்கை முபத்திரண்டு. கபிலரால் பூக்களுக்குச் சுட்டப்பட்ட அடைகளை மட்டும் முன்னிறுத்தி விவாதிக்கிறது இக்கட்டுரை.  
          சங்கப் பனுவல்களின் மொழியமைப்பில் அடைகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. தலைமக்களும் அவர்தம் உடல் உறுப்புகளும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும் அணிகலன்கள், இசைக்கருவிகள், படைக்கருவிகள், வாழ்விடப் பொருள்கள் முதலிய செயற்கைப் பொருள்களும் அவை பயின்று வரும் இடங்கள் பலவற்றிலும் அடைபெற்றே வந்துள்ளன. சங்கப் பனுவல்களுள் அடைகள் பரக்கப் பயன்படுத்தப்பட்டிருந்த போதும் அவற்றைத் தனித்த சொல்வகைகளாகத் தமிழ் மரபிலக்கணங்கள் கொள்ளவில்லை. எனினும் அடையாக வரும் சொற்கள் குறித்த சிந்தனைகளைத் தமிழ் மரபிலக்கணங்களில் காணமுடிகிறது. ‘இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை’ (தொல். சொல். 18), ‘வண்ணச்சினைச்சொல்’ (தொல். சொல். 26) உள்ளிட்டவை பற்றிய செய்திகள் தொல்காப்பியத்தில் காணக்கிடைக்கின்றன.  நன்னூலுள் ஈரடையாக அமையும் தன்மையும் சுட்டப்பட்டுள்ளன (நன்னூல் 403) இலக்கணச் செய்திகள் ஒருபுறமிருக்கக் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பூக்களுக்குத் தந்த அடைகளைத் தொகுத்து வகைப்படுத்திப் பார்க்கும்போது சங்க இலக்கிய மொழியில் தொழிற்பட்டுவரும் அடைகள் குறித்த ஒரு புரிதலைப் பெறமுடியும். 
          பூ என்றதும் பெரும்பாலும் அதனது மணம் வீசும் தன்மையே முதலில் நினைக்கப்பெறும். நிறம், வடிவம், அளவு என இவை அடுத்தடுத்து நம் நினைவில் வந்துபோகும். வசதி கருதி இம்முறையிலேயே பூக்களுக்குக் கபிலர் தந்த அடைகளும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 

மணத்தை உணர்த்தும் அடைகள்
          ‘நறு’, மற்றும் ‘கடி’ என்னும் இரண்டையும் மட்டுமே பூக்களின் மணத்தைக் குறிக்க அடையாகப் பயன்படுத்தியுள்ளார் கபிலர். நறு என்பது மணம்மிக்க என்ற பொருளிலும், கடி என்பது மணம் என்னும் பொருளிலும் ஆளப்பட்டுள்ளன.  கமழ் என்னும் சொல்லினால் மணம் வீசுதல் என்னும் பொருளில் தேன் கமழ், கடி கமழ், கள் கமழ் என்னும் சொல்லிணைகளும் மணம் குறித்த அடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரிந்த                                                                              கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ
குறுநறுங் கண்ணி - குன்றிப்பூ
தேன் கமழ் பாதிரி --  தேனாறும் பாதிரிப்பூ
கடி கமழ் கலிமா - விரைகமழும் தழைத்த மாம்பூ
நீள் நறு நெய்தல் -- நீண்ட நறிய நெய்தற்பூ
நறு தண் கொகுடி -  நறிய குளிர்ந்த கொகுடிப்பூ
கொங்கு முதிர் நறு வழை -- தாது முதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ
மணி குலை கள் கமழ் நெய்தல் -- நீலமணிபோலுங் கொத்துக்களையுடைய தேனாறும்                                                        கருங்குவளை
நறு புன்னாகம் - மணமிக்க புன்னாகப்பூ
கடி இரு புன்னை -- மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ

நிறத்தை உணர்த்தும் அடைகள்
          மணத்தை அடுத்து பூக்களின் நிறம் குறித்து வந்த அடைகளைக் கணக்கில் கொண்டால் செம்மைக்கு ஒன்றும், வெண்மைக்கு ஒன்றும், பசுமைக்கு ஒன்றும், கருமைக்கு இரண்டும் என மொத்தம் ஐந்து அடைகள் மட்டுமே நிரத்தைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. 
வள் இதழ் ஒள் செங்காந்தள் - பெரிய இதழை உடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூ
வால் பூ குடசம் - வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப்பூ
பைங்குருக்கத்தி - பசிய குருக்கத்திப்பூ
நள்ளிருணாறி - இருவாட்சிப்பூ
மா இரு குருந்தும் - கரிய பெரிய குருந்தம்பூவும் 

உவமையின் வழி நிறத்தை உணர்த்தும் அடைகள் 
          நெருப்பைக் குறிக்கும் எரி என்னும் சொல்லும், சுடர் என்னும் சொல்லும் அடையாக்கப்பட்டுள்ளன. அடர் மஞ்சள் அல்லது பொன்னிறம் எனச் சொல்லத்தகுந்த நிறத்தையுடைய மலர்களுக்கு இவை அடையாக அமைக்கப்பட்டுள்ளன. மஞ்சளைப் போலவே கருமையைக் குறிக்க, நவரத்தினங்களுள் நீல நிறத்தில் உள்ள நீலமணியைக் குறிக்கும் மணி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
எரி புரை எறுழம் - நெருப்பை ஒத்த எறுழம்பூ
சுடர்பூ தோன்றி - விளக்குப்போலும் பூவினையுடைய தோன்றிப்பூ
மணி பூ கருவிளை - நீலமணிபோலும் பூக்களையுடைய கருவிளம்பூ
மணி குலை கள் கமழ் நெய்தல் - நீலமணிபோலுங் கொத்துக்களையுடைய                                                                 தேனாறும் கருங்குவளை 

வடிவத்தை உணர்த்தும் அடைகள்
          வடிவம் குறித்த அடைகளுள் பூவினது இதழின் அமைப்பும் (பல இதழ்கள், விரி இதழ், பெரிய இதழ்), கொத்தாக மலரும் பூக்களின் தன்மையும், பூ விரிந்து மலரும் தன்மையும் என இவையே வடிவம் சார்ந்த அடையாக அமைக்கப்பட்டுள்ளன. வடிவம் சார்ந்த இவ்வடைகள் ஒரு வாய்பாட்டுத் தன்மையில் இருப்பதையும் உணரமுடிகிறது. முள்ளைத் தண்டிலே உடைய தாமரை என்றும் தொங்கும் வகையில் அமைந்த கொன்றை என்றும் தாமரையும் கொன்றையும் மட்டும் வேறு தன்மையில் காட்டப்பட்டுள்ளன.
வள் இதழ் ஒள் செங்காந்தள் - பெரிய இதழை உடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூ
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரிந்த                                                                     கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ
பல் இணர் குரவம் - பல இதழ்களையுடைய குரவம்பூ
பல் இணர் காயா - பல கொத்துக்களையுடைய காயாம்பூ
விரி மலர் ஆவிரை - விரிந்த பூக்களையுடைய ஆவிரம்பூ
விரி பூ கோங்கம் - விரிந்த பூக்களையுடைய கோங்கம்பூ
பல் பூ தணக்கம் - பல பூக்களையுடைய தணக்கம்பூ
பல் பூ பிண்டி - பல பூக்களையுடைய அசோகம்பூ
முள் தாள் தாமரை - முள்ளையுடைத்தாகிய தாளையுடைய தாமரைப்பூ
தூங்கு இணர் கொன்றை - தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ

அளவினை உணர்த்தும் அடைகள்
          பூக்களின் அளவும் அவற்றிற்குரிய அடைச்சொற்களாக அமைக்கப் பயன்பட்டுள்ளன. குறு, சிறு, பெரு, நீள், நெடு உள்ளிட்ட வினையடிகளும் மா எனும் அடைச்சொல்லும் பூக்களின் அளவு குறித்த அடைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் நெடு என்னும் அடை மட்டும் பூவுக்கல்லாமல் அப்பூவைத் தோற்றுவிக்கும் கொடிக்கு தரப்பட்டுள்ளது.
வள் இதழ் ஒள் செங்காந்தள் - பெரிய இதழை உடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூ
குரீஇப்பூளை - சிறுபூளை
குறுநறுங் கண்ணி -- குன்றிப்பூ
பெரு தண் சண்பகம் - பெரிய குளிர்ந்த சண்பகப்பூ
நீள் நறு நெய்தல் - நீண்ட நறிய நெய்தற்பூ
சிறுசெங்குரலி - கருந்தாமக்கொடிப்பூ
நெடு கொடி அவரை - நெடிய கொடியினையுடைய அவரைப்பூ 
மா இரு குருந்தும் - கரிய பெரிய குருந்தம்பூவும் 

இடத்தை உணர்த்து அடைகள் 
          பூக்கள் மலரும் இடத்தைக் குறித்தும் இரண்டு அடைகள் இடம்பெற்றுள்ளன. 
தண் கயக் குவளை - குளிர்ந்த குளத்தில் பூத்த செங்கழுநீர்ப்பூ
கல் இவர் முல்லை - கல்லிலே படர்ந்த முல்லைப்பூ
இவற்றுள் குவளை மலரானது குளிர்ச்சி பொருந்திய குளத்தில் மலரும் என்பதில் சிக்கலில்லை. கல் இவர் முல்லை என்பதால் முல்லை மலர் கல்லில் தான் படர்ந்து வளரும் என எண்ணிவிடக்கூடாது. குறிஞ்சிப்பாட்டில், தோழி பறித்த அந்த குறிப்பிட்ட முல்லையானது கல்லில் படர்ந்திருந்ததாகக் கொள்ள வேண்டும்.

இரு வேறு தன்மைகளை உணர்த்தும் அடைகள்
          குறிஞ்சிப்பாட்டில் அடைகள் பெற்ற மலர்களுள் சில இரு வேறு தன்மைகளை அடையாகப் பெற்று வந்துள்ளமையையும் காணமுடிகிறது. 
உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் - தனக்கு உரித்தாக நாறும் விரிந்த                                                                     கொத்தினையுடைய பெருமூங்கிற்பூ
நறு தண் கொகுடி - நறிய குளிர்ந்த கொகுடிப்பூ
கொங்கு முதிர் நறு வழை - தாதுமுதிர்ந்த நறிய சுரபுன்னைப்பூ
நீள் நறு நெய்தல் - நீண்ட நறிய நெய்தற்பூ
குறுநறுங் கண்ணி - குன்றிப்பூ
கடி இரு புன்னை - மணத்தையுடைய பெரிய புன்னைப்பூ
மணி குலை கள் கமழ் நெய்தல் - நீலமணிபோலுங் கொத்துக்களையுடைய                                                                 தேனாறும் கருங்குவளை
தூங்கு இணர் கொன்றை - தூங்குகின்ற பூங்கொத்தினையுடைய கொன்றைப்பூ
மா இரு குருந்தும் - கரிய பெரிய குருந்தம்பூவும் 
பெரு தண் சண்பகம் - பெரிய குளிர்ந்த சண்பகப்பூ
மேற்கண்ட அடைகளுள் தண் என்னும் அடை பூவின் குளிர்ச்சி பொருந்திய தன்மையையும், கொங்கு முதிர் என்னும் அடை பூவின் பருவத்தையும் உணர்த்தி நிற்கின்றன.

அமர் ஆத்தி
          அமர் ஆத்தி - என்பதற்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர் பொருந்தின ஆத்திப்பூ என உரைத்துள்ளார். பிற்கால உரையாசிரியர்கள் இதற்கு மணம் பொருந்தின ஆத்திப்பூ என உரை எழுதியுள்ளனர்.

முடிவாக
          குறிஞ்சிப்பாட்டில் கபிலரால் பூக்களுக்குத் தரப்பட்ட அடைகளைத் தொகுத்துக்கண்ட போது பின்வரும் சில கருத்துகளைப் பெற முடிகிறது.
·         பூக்களின் மணம், நிறம், வடிவம், அளவு, பூக்கள் தோன்றும் இடம் ஆகியவை கபிலரால் அடைகளாக அமைக்கப்பட்டுள்ளன. 
·         பூக்களின் மணம், நிறம், அளவு உள்ளிட இரு வேறு தன்மைகளை இணைத்தும் அடைகள் தரப்பட்டுள்ளன. 
·         பூக்களில் இருந்து பெறப்படும் பொருள்களான தேன், கள் (மது) ஆகியவை     பூக்களின் மணத்தைக் குறிப்பதற்கு அடைகளாக ஆக்கப்பட்டுள்ளன.
·         நெருப்பு, மணி ஆகியவை இரண்டும் பூக்களின் நிறத்தை உணர்த்த அடைகளாக்கப்பட்டுள்ளன. 
·         வடிவம் சார்ந்த அடைகளுள் ஒரு வாய்பாட்டுத் தன்மை இருப்பதை உணரமுடிகிறது.

          இவை ஒருபுறமிருக்க, தொண்ணுற்றொன்பது பூக்களுள் குறிப்பிட்ட முப்பத்தி மூன்று பூக்கள் மட்டும் அடை பெற்று வந்துள்ளமை குறித்துச் சிந்திக்கிற போது, யாப்பு விதிக்கு உட்பட்டு எழுத வேண்டிய கட்டுப்பாடே அதற்குரிய காரணமாக இருந்திருக்க வேண்டும் என எண்ணத்தோன்றுகிறது. அடை பெற்ற பூக்கள் பெரும்பாலும் பாடலடிகளின் இறுதியில் வருமாறு அமைக்கப்பட்டுள்ளமை இக்கருத்தை உறிதிப்படுத்துவதாக அமைகிறது.
          வரிசைப்படுத்தப்பட்டுள்ள மலர்களுள் பெரும்பாலானவை குறிஞ்சி நிலத்தில் காணப்படதாவை அவை எவ்வாறு குறிஞ்சி நிலத்தில் கிடைத்டிருக்க முடியும்? என்னும் வினாவையும், பெண்கள் ஒன்று சேர்ந்து பறித்துப் பாறையில் பரப்பியதாகச் சொல்லப்பட்டுள்ள இம்மலர்களுள் தென்னை மரத்தின் பூ எனப்படும் தென்னம்பாளையும் ஒன்றாக அமைந்துள்ளமை குறித்த வியப்பையும் தாண்டிப் பூக்களின் பெயர்களைத் தொகுத்துச் சொல்லும் அந்தப் பகுதி ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. வெறுமனே பூக்களின் பட்டியலாக அமைந்திருக்க வேண்டிய அந்த வரிகளைப் பூக்களுக்குத் தரப்பட்ட அடைகளே கவித்துவம் மிக்கவையாக மாற்றியுள்ளன எனச் சொல்வதில் தவறொன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. 

துணை நின்ற நூல்கள்

1. சாமிநாதையர் உ.வே. (ப - ர்), 1986, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் (நிழற்பட மறுபதிப்பு), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
2. சுப்பிரமணியன், ச.வே. (உ - ர்), 2003, பத்துப்பாட்டு, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.
3. சுந்தரமூர்த்தி, கு. (ப - ர்), 1996. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனவரையம், அண்ணாமலைப் பல்கலைக்கழ்கம், சிதம்பரம்.
4. தாமோதரன், அ. (ப-ர்), 1999. பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம் புத்துரை என்னும் விருத்தியுரையும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
         
குறிஞ்சிப்பாட்டில் கபிலரால் அடைபெற்ற மலர்கள் அகரவரிசையில்
(அடைப்புக்குறிக்குள் இருப்பவை அடைகள், எண்கள் பாடலடியைக் குறிக்கின்றன)

1.       (நெடுங்கொடி) அவரை  87
2.       (அமர்) ஆத்தி  87
3.       (விரிமலர்) ஆவிரை  71
4.       (நள்ளிருள்) நாறி  94
5.       (உரி நாறு அமிழ்து ஒத்து) உந்தூழ்  65
6.       (எரிபுரை) எறுழம்  66
7.       (குறு நறுங்) கண்ணி  72
8.       (மணிப்பூங்) கருவிளை  68
9.       (ஒண்செங்) காந்தள்  62
10.     (பல்லிணர்க்) காயா  70
11.     (வான் பூங்) குடசம்  67
12.     (சிறு) செங்குரலி  82
13.     (பல்லிணர்க்) குரவம்  69
14.     (பைங்) குருக்கத்தி  92
15.     (மாயிருங்) குருந்தம்  95
16.     (தண்கயக்) குவளை  63
17.     (நறுந்தண்) கொகுடி  81
18.     (தூங்கு இணர்க்) கொன்றை  86
19.     (விரிபூங்) கோங்கம்  73
20.     (பெருந்தண்) சண்பகம்  75
21.     (பல்பூந்) தணக்கம்  85
22.     (முள் தாள்) தாமரை  80
23.     (கடி கமழ் கலிமாத்) தில்லை  77
24.     (சுடர் பூந்) தோன்றி  90
25.     (நறும்) புன்னாகம்  91
26.     (நீள் நறு) நெய்தல்  79
27.     (மணிக்குலைக் கள் கமழ்) நெய்தல்  84
28.     (தேங்கமழ்) பாதிரி  74
29.     (பல் பூம்) பிண்டி  88
30.     (கடியிரும்) புன்னை  93
31.     (குரீஇப்) பூளை  72
32.     (கல் இவர்) முல்லை  77
33.     (கொங்கு முதிர் நறு) வழை  83

Comments

  1. //சங்கப் பனுவல்களின் மொழியமைப்பில் அடைகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன.// இப்படிப்பட்ட பயன்பாடுகளைத் தவிர்க்கலாம். அடைகள் எல்லா மொழிகளிலும் எல்லா காலங்களிலும் மிக முக்கிய இடத்தைப்பிடிக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்திற்கு நன்றி அண்ணா.
      இதுபோன்ற தொடர்களைத் தவிர்த்துவிடுகிறேன்.

      Delete
  2. செந்தில், கட்டுரை முற்றுப்பெறாமல் நிற்கிறது. பகுப்பாய்வுக்கான முடிவுகளைத் தெரிவிப்பதில் ஏனிந்த அவசரம். ஜீனியஸாகத் தொடங்கி சாதாரணமாக முடித்திருக்கிறாய். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம். முன்னுரை, முடிவுரை எழுதும்போது சாதாரணமான ஸ்டேட்மென்ட்களைத் தவிர்க்கவும்.

    ReplyDelete
    Replies
    1. மேலும் செய்திகளை பெறமுடியுமா என முயல்கிறேன். நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)