கபிலர் தந்த அடைகள்
முன்னுரை குறிஞ்சித் திணையுடன் தன் மனதை முழுவதும் ஒன்றவைத்துப் பெற்ற உணர்வுகளைக் கவிதையாக வடித்தவர் கபிலர். குறிஞ்சித்திணையைக் காட்சிப்படுத்தும் கபிலரது கவித்துவம் குறிஞ்சிப்பாட்டில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது எனச் சொல்வதற்குச் சான்றுகள் தேடவேண்டியதில்லை. குறிஞ்சிப்பாட்டில், தோழியானவள் பாறைமேல் பரப்பிய பூக்களாகக் கபிலர் காட்டியவற்றின் எண்ணிக்கை தொண்ணூற்றொன்பது. அவற்றுள் அவரால் அடைகொடுக்கப்பட்ட பூக்களின் எண்ணிக்கை முபத்திரண்டு. கபிலரால் பூக்களுக்குச் சுட்டப்பட்ட அடைகளை மட்டும் முன்னிறுத்தி விவாதிக்கிறது இக்கட்டுரை. சங்கப் பனுவல்களின் மொழியமைப்பில் அடைகள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. தலைமக்களும் அவர்தம் உடல் உறுப்புகளும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட இயற்கைப் பொருள்களும் அணிகலன்கள், இசைக்கருவிகள், படைக்கருவிகள், வாழ்விடப் பொருள்கள் முதலிய செயற்கைப் பொருள்களும் அவை பயின்று வரும் இடங்கள் பலவற்றிலும் அடைபெற்றே வந்துள்ளன. சங்கப் பனுவல்களுள் அடைகள் பரக்கப...