சொந்தம் கொண்டாடும் சொற்களுடன் புழங்கிய தருணம்
2002 ஆம் ஆண்டு கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறையில் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு வகுப்பில் சேர்ந்து ஓரிரு மாதங்களே ஆகியிருந்த காலம். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்ற நாள். திருவனந்தபுரம் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் கேரளப் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் உள்ள பல்கலைக்கழகப் பேரவைக் கூட்ட அறையில் சொற்பொழிவிற்காகத் தமிழ்த்துறை மாணவர்கள் குழுமியிருந்தோம். ‘கைகோக்கும் சொற்களுக்கு ஓர் அகராதி’ என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்ற வந்திருந்தார் பேராசிரியர் பா.ரா. சுப்பிரமணியன் அவர்கள். அகராதி என்றால் சொற்களுக்குப் பொருள் தரும் நூல் என்ற பொதுபுத்தியில் உறைந்திருந்த என் போன்ற முதலாமாண்டு மாணவர்களுக்கு நிச்சயம் அந்தத் தலைப்பின் அர்த்தம் அந்த வேளையில் புலனாகவில்லை. ஆனால் தங்கள் முதுகலைப் பட்டத்தின் ஒரு பகுதியாகச் சொல்லடைவு தொடர்பான ஆய்வேட்டினை உருவாக்கிக்கொண்டிருந்த; பின் வரிசையில் அமர்ந்திருந்த முதுகலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கும், முதுகலை பட்டத்திற்காகவோ அல்லது இளநிலை ஆய்வு பட்டத்திற்காகவோ அதே சொல்லடைவு வேலையை...