தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)
I தமிழ் அகராதி வரலாற்றின் தொடக்கமாகத் தொல்காப்பிய உரியியல் விளங்குகிறது , உரியியல் தவிர்த்து இடையியல் , மரபியல் உள்ளிட்ட இயல்களிலும் சொற்பொருள் விளக்கம் தருவனவாகச் சில நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. வரலாற்று முறையில் அமைக்கப்படும் தமிழ் அகராதி ஒன்றிற்குத் தொல்காப்பிய உரியியலும் தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள சில பொருள் விளக்க நூற்பாக்களும் பங்களிப்பைத் தர முடியும் , இந்நேரடியான பங்களிப்பு ஒருபுறம் இருக்க , தொல்காப்பியரால் வேறு நோக்கத்திற்காக ஆக்கப்பட்ட நூற்பாக்கள் சிலவற்றிலிருந்தும் பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய அல்லது அகராதி ஒன்றை உருவாக்கும் பணிக்குத் துணைபுரியக்கூடிய சில வழிமுறைகளை வகுத்துக்கொள்ள முடிகிறது. வேறு நோக்கத்தில் ஆக்கப்பட்ட நூற்பாக்களிலிருந்து ஊகிப்பதன் அடிப்படையில் பயன்பாட்டு அகராதியியலுடன் தொடர்புடைய சில கருத்துகளை எடுத்துத்தர முயல்கிறது , இக்கட்டுரை. கட்டுரை இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் உரியியல்பற்றிய சில பொதுவான செய்திகளும் இரண்டாம் பகுதியில் தொல்காப்பிய நூற்பாக்களிலிருந்து பெறப்பட்ட அகராதியியலுடன் தொடர்புடைய செய்திகளும் தரப்பட...