தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்


தமிழ் உரைமரபின் தொன்மை
            தமிழ்மொழி பெற்றுள்ள சிறப்புகளுக்குக் காரணமாக அமைபவை அதன் இலக்கிய இலக்கண வளங்கள் மட்டுமன்று. அந்த இலக்கிய இலக்கணங்களை விளக்குவதற்கு எழுந்த உரைகளும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான பங்களிப்பைத் தமிழ் மரபிற்கு வழங்கியுள்ளன. தமிழ் இலக்கிய, இலக்கண மரபைப் போன்று தமிழ் உரை மரபும் தனக்கென மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகத் திகழ்கிறது. தமிழில் இன்று கிடைத்துள்ள உரைகளுள் முதலாவதாக அமைவது இறையனார் களவியல் என்னும் நூலுக்கு மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் எழுதிய உரையாகும். எனினும், இந்த உரை கிடைத்தனவற்றுள் முதலாவதே தவிரத் தமிழின் முதல் உரை அன்று.
காண்டிகையும் உரையும்
            தொல்காப்பியப் பெருநூல் உரை வகைகளாகக் குறிப்பிடுவது காண்டிகை, உரை என்ற இரண்டை மட்டுமே.
            பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பிற்
            கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்.   (பொருள். 647, இளம்.)

            விட்டகல் வின்றி விரிவொடு பொருந்திச்
            சுட்டிய சூத்திர முடித்தற் பொருட்டா
            ஏது நடையினும் எடுத்துக் காட்டினும்
            மேவாங் கமைந்த மெய்ந்நெறித் ததுவே.  (பொருள். 648, இளம்.)
மேற்கண்ட இரண்டு நூற்பாக்களும் காண்டிகை உரையின் இலக்கணம் கூறவந்தவை. அதாவது, காண்டிகை உரை என்பது நூற்பா நுவலும் பொருளிலிருந்து அகலாமல் தகுந்த ஏது, எடுத்துக்காட்டுகளைக் காட்டி உரை அமைப்பது எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. இனி உரை என்பது,
            சூத்திரத் துட்பொரு ளன்றியும் யாப்புற
            இன்றி யமையா தியைபவை எல்லாம்
            ஒன்ற உரைப்ப துரையெனப் படுமே.        (பொருள். 649, இளம்.)

            மறுதலைக் கடாஅ மாற்றமு முடைத்தாய்த்
            தன்னூ லானும் முடிந்த நூலானும்
            ஐயமு மருட்கையுஞ் செவ்விதின் நீக்கித்
            தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇத்
            துணிவொடு நிற்றல் என்மனார் புலவர்.    (பொருள். 650, இளம்.)
உரைக்கு மறுதலையாய் உடையனவற்றைப் பற்றி வினாவுதலும் அவ்வினாவிற்கு விடை கூறுதலும் ஐயம் ஏற்படும் இடங்களையும் மயக்கம் எற்படும் இடங்களையும் தெளிவாக விளக்கி, முறையாக ஒரு பொருளினை வரையறுத்து, அதனைத் துணிந்து உரைத்தல் உரையின் இலக்கணமாக அமைகிறது. காண்டிகையும், உரையுமே தொல்காப்பியர் காலத்தில் உரை வகைகளாக அமைந்திருந்தன.
காண்டிகை, விருத்தி
            பாயிர இலக்கணத்தை நன்றாக அமைத்துள்ள நன்னூலுள் காண்டிகை, விருத்தி என்ற இரண்டு மட்டுமே உரையின் வகைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன.
            கருத்துப் பதப்பொருள் காட்டு மூன்றினும்
            அவற்றொடு வினாவிடை யாக்க லானுஞ்
            சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை.                     (நன். 22)
‘கருத்துரையும் பதப்பொருளும் உதாரணமும் ஆகிய மூன்றனையும் உரைத்தலானும் அம்மூன்றனோடு வினா, விடை என்னும் இரண்டனையும் கூட்டி உரைத்தலானும் சூத்திரத்துட்பொருளை விளக்குவன காண்டிகையுரைகளாம் (நன். 22, விருத்தி. ப. 131)’ என்கிறது, நன்னூல் விருத்தியுரை.
அடுத்த நூற்பாவான,
            சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக்
            கின்றி யமையா யாவையும் விளங்கத்
            தன்னுரை யானும் பிறநூ லானும்
            ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு
            மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி.                        (நன். 23)
என்பதில் விருத்தியுரையின் இலக்கணத்தை அழகாகத் தந்துள்ளார் நன்னூலார். இந்நூற்பாவிற்குரிய உரை பின்வருமாறு அமைந்துள்ளது. ‘காண்டிகையுரைபோல் சூத்திரத்துட்பொருள் விளக்குதல் மாத்திரையின் நில்லாது, அவ்விடங்கட்கு இன்றியமையாத பொருள்கள் யாவையும் விளங்கத் தான் உரைக்கும் உரையானும் ஆசிரிய வசனங்களானும் மேற்கூறிய காண்டிகை உறுப்பு ஐந்தனானும் ஐயம் தீரச் சுருங்காது மெய்ம்மைப் பொருளை விரித்து உரைப்பது விருத்தியுரையாம்' (நன். 23, விருத்தி. ப. 131).
உரைப்பகுதிகள்
            ஒரு நூற்பாவிற்கான அல்லது ஒரு செய்யுளுக்கான உரைப்பகுதியில் என்னென்ன கூறுபாடுகள் அமைந்துள்ளன என்பதை வைத்துத்தான் அவ்வுரை காண்டிகை உரையா அல்லது விருத்தியுரையா என வகைப்படுத்தப்பட்டது. தமிழ் இலக்கணப்பரப்பில் உரைகளுக்கு வகைப்பாடு அமைந்திருந்ததுபோல உரைகளுக்கு உறுப்பாக அமையும் உரைப்பகுதிகளைப் பற்றிய விளக்கங்களும் அமைந்துள்ளன.
கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல்
            உரையில் இடம்பெறவேண்டிய கூறுபாடுகள்பற்றிய முதல் பதிவினை இறையனார் களவியலுரை நமக்குத் தருகிறது. கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல் என்னும் நான்கும் உரையின் கூறுகளாக அமையத்தக்கன என இறையனார் களவியல் உரையுள் குறிக்கப்பட்டுள்ளன. ‘சூத்திரம் உரைக்கின் அது நான்கு வகையான் உரைக்கப்படும் அஃதுரைக்குமாறு கருத்துரைத்துக் கண்ணழித்துப் பொழிப்புத்திரட்டி அகலங்கூறலென' (இறை. 1, ப. 21).
            நம்பியகப்பொருள் பழைய உரை இந்நான்கினையும் தெளிவாக விளக்குகிறது. ‘கருத்துரைத்தலாவது சூத்திரத்து உட்கோள் உரைத்தல்' ‘கண்ணழித்தலாவது சூத்திரத்துச் சொற்றொறும் சொற்றொறும் பொருளுரைத்தல்', ‘பொழிப்புத் திரட்டலாவது சூத்திரத்துப் பொருளையெல்லாம் தொகுத்துரைத்தல்', ‘அகலங் கூறலாவது சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவும் விடையும் உள்ளுரைத்து விரித்துரைத்தல்' (நம்பி. 1, உரை, பக். 8, 9). இக்கூறுபாடுகள் யாவும் விருத்தியுரைக்கான கூறுபாடுகளாகக் கொள்ளப்படவேண்டியவை.
            தமிழ் இலக்கண உரை மரபிற்கிணங்க விருத்தியுரையின் பகுதிகளாகச் சொல்லப்பட்ட 1. கருத்துரை, 2. பொழிப்புரை, 3. எடுத்துக்காட்டு, 4. அகலவுரை என்னும் இவற்றை உரையாசிரியர்கள் இனங்காட்டிய எடுத்துரைப்பு முறைமைகளாகவும் சிந்தித்துப்பார்க்க முடியும். அவ்வாறு சிந்திப்பது என்பது இலக்கண நூலகளுக்கு எழுந்த பழைய உரைகளில் அனைத்து விஷயங்களும் காணக்கிடைக்கின்றன என்ற தொனியில் அமையும் பழங்கதை பேசுவது போன்றதல்ல. மாறாகப் பழைய உரைகளில் அல்லது பழைய பனுவல்களில் சமகாலத்துடன் பொருந்தும் விஷயங்களை இனங்காணும் ஆர்வத்தின் வெளிப்பாடாகும்.
            விருத்தியுரையின் பகுதிகளாக அமையும் மேற்சுட்டிய நான்கினையும் வேறு வகையில் வகைமைப்படுத்த முடியும் குறிப்பாக உரையாசிரியர்களின் எடுத்துரைப்பு என்னும் கோணத்தில் உரைப்பகுதிகளை 1. முன்னுரைப்பகுதி, 2. கருத்து அல்லது பொருள் விளக்கப் பகுதி, 3. நுட்ப விளக்கப் பகுதி என மூன்றாகப் பகுத்துக்கொள்ள முடியும். இக்கூற்றைத் தொல்காப்பிய உரைகளை முன்னிறுத்திப் பொருத்திப்பார்க்க முயல்கிறது பிவரு பகுதி.
1) முன்னுரைப் பகுதி
அ) நூலுக்கான முன்னுரை             
            தமிழ் இலக்கண மரபில் தொல்காப்பியம் தொடங்கி பெரும்பாலான இலக்கண நூல்களில் பாயிரம் என்னும் பகுதி இடம்பெற்றிருக்கும். இப்பாயிரத்திற்கு எழுதிய உரையினில் பாயிரக் கருத்து போக அந்நூல் குறித்த பொதுவான செய்திகள் நிரம்ப இடம்பெற்றிருக்கும். இச்செய்திகள் யாவும் அந்த நூலுக்கான பொது முன்னுரையாகவே அமைந்துள்ளன.
ஆ) அதிகாரத்திற்கான முன்னுரை
            தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் மூன்று அதிகாரங்களிலும் உள்ள முதல் நூற்பாக்களுக்கு மிக விரிவான அளவில் உரை எழுதியுள்ளனர். இது, ஓர் இலக்கண நூலுக்கான உரை எவ்வாறு அமைய வேண்டும் என்று எடுத்துக்காட்டும் பாங்கில் அமைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. உரையாசிரியர்கள் அனைவரும் பெரும்பாலும் கற்பித்தல் பணியை மேற்கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். இலக்கண நூற்பா ஒன்றை எப்படியெல்லாம் அணுக வேண்டும் என்பதை மாணவனுக்குக் கற்பிக்கும் தன்மையில் அமைந்துள்ளன தொல்காப்பிய முதல் நூற்பா உரைகள். இலக்கணத்தை ஆழ்ந்த ஆய்விற்கு உட்படுத்திப் பார்த்ததாக இவற்றைக் கருத முடியும். இவ்வாறு முதல் நூற்பா உரையை விரிவாக அமைத்ததன் தொடர்ச்சியாகவே தொல்காப்பியச் சூத்திர விருத்தி, பாயிர விருத்தி உள்ளிட்டவை தோற்றமளிக்கின்றன. இவ்வாறு முதல் நூற்பாவிற்கு எழுதப்படும் விரிவான விளக்க உரைகள் யாவும் குறிப்பிட்ட அதிகாரத்தில் கூறப்படும் செய்திகளுக்குரிய முன்னுரையாகவே அமைகின்றன.

(எ--டு)
            இவ்வதிகாரம் என் நுதலி எடுத்துக்கொள்ளப்பட்டதோவெனின் அதிகாரம் நுதலியதூஉம் அதிகாரத்தினது பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின் எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்து. எழுத்துணர்த்தினமை காரணத்திற் பெற்ற பெயர் என உணர்க. எழுத்து எனைத்து வகையான் உணர்த்தினாரோ வெனின் எட்டு வகையானும் எட்டிறந்த பலவகையானும் உணர்த்தினாரென்பது. அவற்றுள் எட்டு வகையாவன எழுத்து இனைய என்றலும், இன்ன பெயர என்றலும் . . . (தொல். எழுத்து. 1, இளம்.)
இ) இயலுக்கான முன்னுரை
            நூல் ஒன்றின்கண் அமைந்துள்ள உட்பிரிவுகளுக்கான ஒரு முன்னுரை போன்று உரையாசிரியர்களால் எழுதப்படுவதே அவதாரிகை ஆகும். தொல்காப்பிய உரையாசிரியர்களைப் பொறுத்தமட்டில் இளம்பூரணர் மட்டுமே அவதாரிகை எழுதியுள்ளார். எழுத்ததிகாரத்திற்கும் பொருளதிகாரத்திற்கும் மட்டுமே அவரது அவதாரிகை உள்ளது. இயல் பெயர்க்காரணம், இயல் வைப்புமுறை உள்ளிட்டவை அவதாரிகைகளில் குறிக்கப்பட்டுள்ளன.
            ‘இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், எழுத்துக்களது பிறப்பு உணர்த்தினமையின் பிறப்பியல் என்னும் பெயர்த்து. இதனை நூன்மரபின் பின்னே வைக்கவெனின், சார்பில் தோற்றத் தெழுத்தும் தனிமெய்யும் மொழிமரபிடை உணர்த்திப் பிறப்பு உணர்த்த வேண்டுதலின் மொழி மரபின் பின்னதாயிற்று’ (எழுத்து. பிறப்பியல் அவதாரிகை, இளம். ப. 104) என்றவாறு அமைந்துள்ளது பிறப்பியலுக்கு இளம்பூரணர் எழுதிய அவதாரிகை. பொருளதிகாரத்தில் புறத்திணையியல், களவியல் ஆகியவற்றிற்கு நீண்ட அவதாரிகைகளை எழுதியுள்ளார் இளம்பூரணர்.
ஈ) நூற்பாவிற்கான முன்னுரை
            இலக்கண உரைகளில் நூற்பாக்களைத் தொடர்ந்ததாக, உரையின் முதல் பகுதியாகக் கருத்துரைகள் அமைக்கப்படும். நூற்பாக்களின் திரண்ட கருத்தை நயமாக எடுத்து விளக்கும் பகுதியாகக் கருத்துரை விளங்குகிறது. பெரும்பாலான இலக்கண உரையாசிரியர்கள் கருத்துரை எழுதும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர். தொல்காப்பிய உரையாசிரியர்களைப் பொறுத்த அளவில் சேனாவரையர் கருத்துரை எழுதவில்லை (அ. தாமோதரன், 2003: 65). இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரும் கருத்துரை எழுதியுள்ள போதிலும் எல்லா நூற்பாக்களுக்கும் ஒரே முறையைப் பின்பற்றி எழுதியதாகத் தெரியவில்லை. தெய்வச்சிலையார் உரியியல் பகுதியிலுள்ள சில நூற்பாக்களைத் தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளுக்கும் கருத்துரை வரைந்துள்ளார். பேராசிரியர் தான் உரைவரைந்த பகுதிகள் அனைத்திற்கும் கருத்துரை எழுதியுள்ளார். கல்லாடர் உரை முழுவதிலும் கருத்துரை இடம்பெற்றுள்ளது. நூல் ஒன்றிற்கு அமைந்த பாயிரம்போன்று நூற்பா ஒன்றின் உரைக்கு அதன் கருத்துரையே முகவுரையாக அமைகிறது.
            (எ--டு) இது குற்றியலுகரம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் நுதலிற்று.
                        (எழுத்து. 67, இளம்.)
                        இச்சூத்திரம் என் நுதலிற்றோ எனின் வேற்றுமைகளின் பெயரும்
                        முறையும் உணர்த்துதல் நுதலிற்று. (சொல். 65, இளம்.)
                        இஃது, உயர்திணைப் பெயருள் விளி ஏற்பன இவை என்கின்றது.
                        (சொல். 122, நச்சர்.)
இவ்வாறு அமையும் கருத்துரைப் பகுதிகள் குறிப்பிட்ட நூற்பாவில் சொல்லப்பட்ட கருத்தைத் திரட்டித் தந்து அந்நூற்பாவிற்கான முன்னுரை போன்று செயல்படுகின்றன.
2) கருத்து அல்லது பொருள் விளக்கப் பகுதி
அ) பொழிப்புரை
            இலக்கண உரைகளில் கருத்துரைப் பகுதியைத் தொடர்ந்து அமைவது பொழிப்புரை ஆகும். நூற்பாவின் செய்யுள் நடையை மாற்றி உரைநடையில் உரைப்பது பொழிப்புரை (அ. தாமோதரன், 2003: 76) எனப் பொழிப்புரை விளக்கம் செய்யப்பெற்றுள்ளது. பொழிப்புரைப் பகுதியில்தான் கண்ணழித்தல் என்னும் பதவுரை, நூற்பாவின் விளக்கம், அதன் கிடக்கைமுறை முதலியவை இடம்பெற்றிருக்கும். தேவை கருதிச் சுருக்கமாகவோ அல்லது விளக்கமாகவோ பொழிப்புரைகள் அமைவதுண்டு. நூற்பாவின் நடைக்கு ஏற்பவும் கிடக்கைமுறைக்கு ஏற்பவும் பொழிப்புரைகள் அமையக்கூடும். பொழிப்புரைகள் பெரும்பாலும் இதன்பொருள் (இ-ள்) எனத் தொடங்கி என்றவாறு (எ-று) என முடிவடைகின்றன.
(எ--டு) எல்லா மென்னும் இறுதி முன்னர்
            வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
            உம்மை நிலையும் இறுதி யான.                             (எழுத்து. 190, இளம்.)
என்ற நூற்பாவிற்கு இளம்பூரணர் எழுதியுள்ள பொழிப்புரை ‘(இ-ள்) எல்லாம் என்னும் இறுதி முன்னர் - எல்லாம் என்னும் மகரவீற்றுச் சொல்லின் முன்பு, வற்று என் சாரியை முற்றத் தோன்றும் - மேற்கூறிய அத்தும் இன்னுமின்றி வற்று என்னும் சாரியை முடியத் தோன்றி முடியும், உம்மை நிலையும் இறுதியான - உம் என்னும் சாரியை நிலைபெறும் இறுதிக்கண் எ-று’. (எழுத்து. 190, இளம்.) என அமைந்து நூற்பாவின் கருத்தைத் தெளிவாக விளக்குவதைக் காணமுடிகிறது.
ஆ) எடுத்துக்காட்டு
            இலக்கண உரைகளில் கருத்துரை, பொழிப்புரை இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்காட்டுகள் இடம்பெறும். நூற்பாவின் கருத்து அல்லது நூற்பா தரும் விதியைக் கற்போன் அதனைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கும் உள்வாங்கிக் கொள்வதற்கும் ஏற்ற வகையில் அந்நூற்பாவின் கருத்து அல்லது விதி பொருந்திவருமாறு அமையும் இடங்கள் எடுத்துக்காட்டப்படும். உரைப்பகுதிகளுள் முக்கியமானது இந்த எடுத்துக்காட்டுப் பகுதி எனில் அது மிகையல்ல. ‘உதாரணம்’ என்றும் ‘வரலாறு’ என்றும் இலக்கண உரைகளில் இப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது. இலக்கண விதிகளை எளிதில் நினைவில்கொள்ளத் துணைநின்றவை இந்த எடுத்துக்காட்டுகளே. இவை வழக்கு, செய்யுள் என்ற இரண்டு வகைகளிலும் உரையாசிரியர்களால் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டுகள் பொழிப்புரையைத் தொடர்ந்து அமைந்த இடங்கள், பொழிப்புரைக்கும் எடுத்துக்காட்டுக்கும் இடையில் சிறு விளக்கம் உள்ள இடங்கள் என இரு வகைகளில் தொல்காப்பிய உரைகளுள் எடுத்துக்காட்டுப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
            இவ்வெடுத்துக்காட்டுகள் யாவும் நூற்பா உணர்த்தும் பொருளை விளக்குவதற்காகவே உரையினுள் இணைக்கப்பட்டுள்ளன.
(எ--டு)
                        ஆக்கந் தானே காரண முதற்றே   (தொல்.சொ.21, சேனா.)
என்னும் தொல்காப்பிய நூற்பா செயற்கைப் பொருளை காரணத்துடன் சொல்லவேண்டும் என்னும் செய்தியைத் தருகிறது. இந்நூற்பா உரையில் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டாக இணைத்துள்ளார் சேனாவரையர்.
கடுகலந்த கைபிழியெண்ணெய் பெற்றமையின் மயிர் நல்லவாயின (தொல். சொல். 21 சேனா.) இது போன்ற எடுத்துக்காட்டுகள்  நூற்பா உணர்த்தும் செய்தியை மனதில் நிறுத்திக்கொள்ள பெரிதும் துணை செய்கின்றன.
இ) ஐயம் தீர்த்தல்
            நூற்பாவில் பொதிந்துள்ள நுட்பமான பொருளைத் தெளிவுபடுத்துவதற்குச் சில வினாக்களை உரையின் நடுவே தாங்களே எழுப்பி அவற்றிற்குரிய விடையையும் தந்து உரையெழுதும் பாங்கு தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் பலரிடத்தும் காணப்படுகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் அறுவரிடமும் இப்பண்பு உள்ளது. இது ஆசிரியர் மாணவர் பரம்பரையில் உரைகள் வழங்கிவந்தமையையும் வாய்மொழியாக வழங்கிவந்தமையையும் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.
            ‘அஃதேல் மயக்கமாவது ஒரு வேற்றுமை பிறிதொன்றின் பொருட்கட் சேறலன்றே, ஏதுவின்கண் வரும் மூன்றாவதும் ஐந்தாவதும் தம் பொருளே பற்றி நிற்றலின் மயங்கின வெனப்படாவெனின் நன்று சொன்னாய், ஏதுப் பொருண்மை தனக்குரியவாற்றான் அவற்றிற்குத் தன் பொருளாயினவாறு போலப் பிறிதொன்றற் குரியவாற்றாற் பிறிதொன்றன் பொருளாதலு முடைமையின் அம்முகத்தான் மயங்கிற்றெனவே படுமென்பது’ (சொல். 92, சேனா.).
            சேனாவரையர் போலவே உரையாசிரியர்கள் அனைவரும் தம் உரையினுள் இவ்வகையிலான வினா விடைகளை அமைத்து ஐயத்திற்குரிய இடங்களை மாணவர்கள் வினவுவதுபோலத் தாமே கேள்விகளை எழுப்பி அவற்றிற்குரிய விடைகளையும் தந்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
3) நுட்ப விளக்கப் பகுதி
கருத்துரை, கண்ணழிப்பு அல்லது பொழிப்புரை, எடுத்துக்காட்டு என்பனவற்றைத் தொடர்ந்து நூற்பா நுவலும் பொருளோடு தொடர்புடைய செய்திகள் பலவற்றையும் திரட்டித்தரும் பகுதியாக அகலவுரைப் பகுதி அமைகிறது. ‘சூத்திரத்துட் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடா விடை உள்ளுறுத்து உரைக்கும் உரை எல்லாம் அகலவுரை’ என்று களவியல் உரை கூறுகின்றது (இறை. 1, உரை, ப. 22). நூற்பாக்களில் இடம்பெற்ற சொற்களுக்கான விளக்கம், இலக்கணக் குறிப்பு, வினா-விடை மூலம் விளக்கங்கள், பிற உரையாசிரியர் மறுப்பு, ஏற்பு, வினைமுடிபு காட்டல், மதம், அழகு, உத்தி இவற்றை விளக்குதல், உவமைகள், வடமொழி மரபினைச் சுட்டல் முதலியவை இப்பகுதியில் இடம்பெறும். இப்பகுதியே உரைச் செயல்பாட்டின் உச்சமான பகுதியாகும். இதனை நுட்ப விளக்கப் பகுதி எனவும் அணுக முடியும்.
            அகலவுரைப் பகுதியில் தொல்காப்பிய உரையாசிரியர்கள் மேற்கொண்ட சில விளக்கங்களைப் பின்வருமாறு தொகுக்க முடியும்.
அ) சொற்பொருள் விளக்கம்
            நூற்பாக்களில் இடம்பெறும் அருஞ்சொற்களுக்குரிய பொருள் விளக்கங்கள் பொழிப்புரை அல்லது அகலவுரை என இவற்றுள் ஓரிடத்தில் விளக்கப்படும். தொல்காப்பிய உரைகளில் பொழிப்புரைப் பகுதியைவிட அகலவுரைப் பகுதியில்தான் பெரும்பாலான சொற்பொருள் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. உரையாசிரியர்களின் பொருள் கோடல் செயல்பாட்டின் முக்கியமான பகுதியாக இச்சொற்பொருள் விளக்கும் பகுதியே அமைகிறது. பொருள் விளங்கிக்கொள்வதில் கடினமாக அமையும் சொற்களைத் தேர்வுசெய்து அச்சொற்களுக்குப் பொருள் விளக்கத்தைத் தரும் தன்மை தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரிடத்திலும் காணப்படுகிறது.
            (எ-டு)  ‘யாதானும் ஒரு சொல் ஒழிவுபட வரின் அஃது ஒழியிசை                                                            எனப்படும் என்றவாறு’ (சொல். 248, இளம்.).
                        ‘இனஞ்சுட்டலாவது இனத்தைச் சுட்டி அவற்றினின்றும்                                                            விசேடிக்கப்படுதல்’ (சொல். 18, சேனா.)
ஆ) இலக்கணக் குறிப்பு
தேவையான இடங்களிலெல்லாம் நூற்பாக்களில் இடம்பெற்றுள்ள சில சொற்களுக்கு இலக்கணக் குறிப்பு தந்து விளக்கும் போக்கும் உரையாசிரியர்களிடம் காணப்படுகிறது. குறிப்பாக அருஞ்சொற்களுக்குப் பதவுரை எழுதும்போது இலக்கணக் குறிப்பையும் சேர்த்து எழுதுவது உண்டு. மேலும் உம், ஏ, ஓ போன்ற இடைச்சொற்கள் நூற்பாக்களில் பயின்றுவரும்போது அவை உணர்த்தும் பொருளைக் குறிப்பதும் உண்டு. காட்டாக
            அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக்கும்
            மெய்தெரி வளியிசை அளபுநுவன் றிசினே.          (எழுத்து. 103, இளம்.)
என்ற நூற்பாவுரையில் இளம்பூரணர் ‘நுவன்று என்பது ஈண்டு இறந்தகாலத் தன்மை வினை’ (எழுத்து. 103, இளம்.) எனச் சொல்லின் இலக்கண வகையைக் குறித்துள்ளமையைக் காட்டாகக் கொள்ளலாம்.
இ) பிற உரையாசிரியர்களை ஏற்றுக்கொள்ளல் அல்லது மறுத்தல்
தொல்காப்பிய உரைகளைப் பொறுத்தமட்டில் இளம்பூரணர் உரைக்கு முன்பு வேறு உரைகள் இல்லாத காரணத்தால் இளம்பூரணர் உரையில் எந்தவித மறுப்புகளும் இல்லை. எனினும், ஓரிரு இடங்களில் தமக்கு முன்பு அல்லது தன் காலத்தில் வழங்கிவந்த வேறுசில உரைகளைப் பற்றிய குறிப்புகள் அவரது உரையில் இடம்பெற்றுள்ளன. ‘இச்சூத்திரத்திற்குப் பிறிதுமொரு பொருள் உரைப்பாரும் உளர்’ (சொல். 443, இளம்.). என்பன போன்று அமைந்த இடங்கள் மறுப்புரையாக அமையாமல் பிறவாறும் உரைகள் உள்ளன என்பதைக் காட்டுவதாகவே உள்ளன. ‘அவை போலியுரை யென்க’ (சொல். 24, சேனா.). இது, சேனாவரையர் இளம்பூரணரை மறுத்த இடங்களுள் ஒன்று. தெய்வச்சிலையாரது மறுப்புரைகளுள் ஒன்று ‘அது சொல்லறியாதார் உரையென்க’ (சொல். 64, தெய்வ.) என்றவாறு அமைந்துள்ளது. ‘இவற்றை வேறு உருவகமென்று பிறர் மயங்குப’ (பொருள். 284, பேரா.) என அமைந்துள்ளது பேராசிரியரது மறுப்புரைகளுள் ஒன்று.
            நச்சினார்க்கினியர் பிற உரையாசிரியர்களைச் சில இடங்களில் மறுத்துள்ள போதிலும் தம் கருத்திற்கு அரணாகப் பிற உரையாசிரியர்களின் கருத்துகளைக் குறிப்பிட்ட இடங்களும் அவரது உரையில் உள்ளன. காட்டாக, ‘பேராசிரியரும் இப்பாட்டின் மீனெறி தூண்டிலென்றதனை ஏனையுவமமென்றார்’ (பொருள். 48, நச்சர்.). என்ற இடத்தைக் கொள்ளலாம். பிற உரையாசிரியர்களது கருத்துகளை ஏற்றும் மறுத்தும் உரை செய்வது ஓர் உரை மரபாக உரையாசிரியர்களால் பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறாக ஏற்பும் மறுப்புமாக அமையும் உரைப்பகுதிகள் நூற்பா உணர்த்தும் நுட்பமான பொருளை விளக்க வல்லனவாக அமைந்துள்ளன.
ஈ) வினை முடிபு காட்டல்
            இலக்கண நூல்களில் உள்ள நூற்பாக்களின் பொருளைத் தெளிவாக விளங்கிக்கொள்வதற்கு அவற்றில் இடம்பெற்றுள்ள தொடர்களுக்கு இடையேயான இயைபு நன்கு புலனாதல் வேண்டும். அவ்வாறு புலனாவதற்குச் சிறிது கடினமாக உள்ளவை எனத் தாம் எண்ணிய நூற்பாக்களுக்கான வினை முடிபை விளக்கிக்காட்டும் போக்கும் உரையாசிரியர்களிடத்தில் காணப்பட்ட ஒன்றாகும்.
(எ--டு)
உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,
பெயரினும் வினையினும் மெய் தடுமாறி,
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்,
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்,
பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி,
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்,
எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல்.    (தொல்.சொல். 297, சேனா.)

என்ற நூற்பாவிற்கு, ‘தோன்றித் தடுமாறி என்னும் செய்தென் எச்சம், உரிமை தோன்றினும் என்னும் செயின் எச்சத்தினோடு ஒன்றிக் கிளக்க என்னும் வியங்கோளொடு முடிந்தது’ (சொல். 293, தெய்வ.). எனத் தெய்வச்சிலையார் வினைமுடிபு காட்டியுள்ளார்.
உ) என்றதனான், என்ற மிகையான்
            மூலநூலாசிரியன் நூற்பாக்களில் அமைத்த ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்த சொற்களாகவே உரையாசிரியர்களுக்குத் தென்பட்டுள்ளன. நூற்பாக்களில் உள்ள உம், ஏ, ஓ போன்ற ஒவ்வொரு இடைச்சொற்களும் அவை உணர்த்தும் பொருளும் உரையாசிரியர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டுள்ளன. என்றதனான், என்ற மிகையான் போன்ற உரை மரபுத் தொடர்கள் இவ்வுண்மைகளைத் தெற்றெனப் புலப்படுத்தும்.
            (எ--டு)
            விளிமரபில் ன, ர, ல, ள என்னும் நான்கு எழுத்துக்களையும் ஈறாகக் கொண்ட பெயர்கள் விளி ஏற்கும் எனக் கூறிய பின்னர் ‘ஏனைப் புள்ளி ஈறுவிளி கொள்ளா’ (சொல். 132, கல்லா.) என்ற நூற்பா இடம்பெற்றுள்ளது. முன்னர் கூறிய நூற்பாவில் சுட்டப்பட்ட நான்கு எழுத்துக்களையும் ஈறாகக் கொண்ட பெயர்கள்தாம் விளி ஏற்கும் என்று கூறிய பின்னர் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட நூற்பா மிகையாக வந்தது போலத் தோன்றுகிறது. இந்நூற்பா உரையில் இம்மிகை குறித்து இரண்டு செய்திகளை இணைத்துள்ளார்  கல்லாடர். அவை, ‘மற்று இவ்விதி மேலே பெற்றாம் அன்றோ எனின் மேற் சொல்லிய நான்கு புள்ளியீறும் இனிக் கூறுமாறு போலாது விளியேற்றாலும் உடைய என்றற்கு மிகைபடக் கூறப்பட்டது எனக் கொள்க’ என்றும் ‘இன்னும் இம்மிகையானே ஏனைய புள்ளியுள்ளும் சிறுபான்மை யாவனவுள. விளங்கு மணிக்கொடும் பூண் ஆஅய் என யகர ஈறு இயல்பாய் விளி ஏற்றன. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க’ (சொல். 132, கல்லா.) என்றவாறு அமைத்துள்ளார். இவ்வாறான இடங்கள் உரையாசிரியர்கள் மூல நூலாசிரியன்மேல் கொண்ட நம்பிக்கையையும் உரையாசிரியர்களது நுண்ணறிவையுமே காட்டுகின்றன.
ஊ) உவமை
            உரையாசிரியர்களிடத்தில் பொருட் புலப்பாட்டிற்காக உவமைகளைப் பயன்படுத்தும் பழக்கமும் இருந்துவந்துள்ளது. தொல்காப்பிய உரைகளில் உவமைகள் ஆளப்பட்டுள்ள இடங்கள் பொருள் நயத்துடன் அமைந்துள்ளன. இதுவும் ஒரு வகையில் மாணவர்கள் இலக்கண நுட்பங்களை எளிதாக விளங்கிக் கொள்வதன் பொருட்டுச் செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. காட்டாக, குற்றியலிகரம், குற்றியலுகரம் என்பவை அவற்றின் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் நோக்கித்தான் சார்பெழுத்தாகக் கொள்ளப்பட்டுள்ளன, அன்றி அவற்றின் ஓசை குறைவு கருதி அல்ல, ஓசை குறுகின இடத்தும் அவை உயிரெழுத்துக்கள் போன்றனவே என்பதை விளக்க, ‘சந்தனக்கோல் குறுகினவிடத்துப் பிரப்பங்கோல் ஆகாது அதுபோல இகர உகரங்கள் குறுகினவிடத்தும் அவை உயிர் ஆகற்பாலன’ (எழுத்து. 2, இளம்.). என்ற உவமையைப் பயன்படுத்தி நயமாக விளக்கியுள்ளார், இளம்பூரணர்.  
முடிவாக
            தொல்காப்பிய உரையை முன்னிறுத்தி அவ்வுரைகளின் எடுத்துரைப்பினைக் கவனித்தபோது, உரையாசிரியர்கள் வேறு நோக்கத்திற்காக எழுதிய கருத்துரை, பொழிப்புரை, எடுத்துக்காட்டு, அகலவுரை ஆகிய உரைப்பகுதிகளை எடுத்துரைப்பியல் சார்ந்த 1. முன்னுரைப்பகுதி, 2. பொருள்விளக்கப் பகுதி,
3. நுட்பவிளக்கப் பகுதி என மூன்றாக வகைப்படுத்திப் பார்க்கமுடிகிறது.
            உரையாசிரியர்களது இவ்வெடுத்துரைப்பு முறையானது இன்றைய மாணவர்களுக்கு மரபிலக்கணத்தைக் கற்பிக்க நாம் கைகொள்ளத்தக்கதாய் மாதிரிகளைக் கொண்டதாய் உள்ளது.
           
துணை நின்ற நூல்கள்
  1. அரவிந்தன், மு. வை., 1995. உரையாசிரியர்கள், மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.
  2. சுந்தரமூர்த்தி, கு. (ப-ர்),1962. தொல்காப்பியம் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியருரை,
  3. திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,சென்னை.
  4. தொல்காப்பியம் சொல்லதிகாரம் கல்லாடனார் விருத்தியுரையும் பழைய உரையும், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
  5. 1979. தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,  சென்னை.
  6. 1996, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
  7. 1996. தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.
  8. 1996. தொல்காப்பியம் பொருளதிகாரம் (தொகுதி 2) களவியல் - கற்பியல் - பொருளியல் (நச்சினார்க்கினியர் - உரை), அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணமலை நகர்.
  9. தாமோதரன், அ. 2003., சங்கரநமச்சிவாயர், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,                       சென்னை.
  10. பவானந்தம் பிள்ளை, ச. (ப--ர்), 2006 (மீள்பதிப்பு), இறையனார் அகப்பொருள்        (நக்கீரனார் உரை), முல்லை நிலையம், சென்னை.



Comments

  1. The Best Slots | Casino Roll
    The best slots at Casino Roll. If you https://deccasino.com/review/merit-casino/ love table games, to play blackjack, you have 토토 to bet twice for https://febcasino.com/review/merit-casino/ the https://deccasino.com/review/merit-casino/ dealer to win. The dealer casino-roll.com must

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)