சங்கப் பனுவல்களின் அமைப்பு - செவிலி கூற்றில் அமைந்த பாடல்களை முன்னிறுத்திச் சில குறிப்புகள்



      தமிழ் மொழியின் தொல்பழம் பனுவல்களாக அமைந்துள்ள சங்க இலக்கியங்கள் என்பவை 1. அவை எழுதப்பட்ட காலம், 2. தொகுக்கப்பட்ட காலம், 3. உரை எழுதப்பட்ட காலம்,



4. பதிப்பிக்கப்பட்ட காலம் என நான்கு காலகட்டங்களின் தாக்குரவுகளைக் கடந்து நமக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இந்த நான்கு காலகட்டத்திலும் நிலவிய சமூகச் சூழல், அரசியல் சூழல் மற்றும் பண்பாட்டுச் சூழல் என இவற்றைக் கணக்கில் கொள்ளாமல் சங்க இலக்கியம் குறித்த முழுமையான புரிதல் சாத்தியப்படாது.


     இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் சங்கப்பனுவல்களை தமிழ்ச் சமூகத்தின் தனிப்பெரும் அடையாளமாகக் கட்டமைத்துக்கொண்டது.  தற்பொழுது இந்திய நடுவணரசால் தமிழ், செம்மொழியாக ஏற்கப்பட்டதற்குப் பின் சங்கப்பனுவல்கள் மீது தமிழ்க்கல்விப்புலத்தில் பரவலாகக் கவனம்குவிக்கப்பட்டுவருகிறது. இவ்வாறான சூழலில் சங்க இலக்கியக் கல்வி என்பது முற்றிலும் மரபான பயிற்றுமுறையைக் கைக்கொண்டதாக அல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் உருப்பெற்ற நவீன சிந்தனை மரபுகளை, அணுகுமுறைகளை உள்வாங்கியதாகவும் அமையும் போது சங்க இலக்கியக் கல்வியும் சங்க இலக்கிய ஆய்வும் மேலும் செழுமை அடையும். இந்த அடிப்படையில் சங்கப்பனுவல்கள் வரித்துக்கொண்ட அமைப்பினைச் செவிலி கூற்றுப் பாடல்களை முன்னிறுத்தி இனங்காண முயற்சிக்கிறது இக்கட்டுரை.


சங்க இலக்கியச் செவிலி கூற்றுப் பாடல்கள்: சில பொதுவான செய்திகள்


      முதலில் சங்க நூல்களுள் காணப்படும் செவிலி கூற்றுப் பாடல்கள் குறித்த பொதுவான சில செய்திகளைத் தெரிந்துகொள்வது நல்லது.


·         சங்கப் பனுவல்களுள் செவிலி கூற்றாக அமைந்த பாடல்களின் மொத்த எண்ணிக்கை- 37


·         நூல் வாரியாக: நற்றிணை-1, குறுந்தொகை-9, ஐங்குறுநூறு-13, அகநானூறு- 3, கலித்தொகை-1 (இக்கலித்தொகைப் பாடல் ஒருபகுதி செவிலியின் வினாவாகவும் மற்றொரு பகுதி செவிலியின் வினாவிற்குக் கண்டோர் அளித்த விடையாகவும் அமைந்துள்ளது).


·         திணை வாரியாக: பாலை-25, முல்லை-12.


·         பாடினோர் வாரியாக: கயமனார்-10, பேயனார்-10, ஔவையார்-1, வெள்ளிவீதியார்-1, மோசிகீரனார்-1, மதுரை ஆசிரியன் கோடங்கொற்றன்-1, கூடலூர் கிழார்-1, குழற்றத்தன்-1, ஓதலாந்தையார்-3, வண்ணப்புற கந்தரத்தனார்-1, கருவூர்க் கண்ணம் புல்லனார்-1, சேரமான் இளங்குட்டுவன்-1, நக்கீரர்-1, குடவாயிற் கீரத்தனார்-1, பாலை பாடிய பெருங்கடுங்கோ-1.


·         கேட்போர் வாரியாக: செவிலி தனக்குத்தனே சொல்லிக்கொண்டவையாக அமைந்தவை-19, நற்றாயிடம் சொன்னவையாக அமைந்தவை-13,இடைச்சுரவழியில் கண்டோரிடம் சொன்னவையாக அமைந்தவை-3, தெருட்டியோரிடமும் தன் மகளான தோழியிடமும் சொன்னவையாகத் தலா 1 பாடலும் அமைகின்றன.


·         பாலைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்கள் பலவும் மகட்போக்கிய செவிலித்தாய் கூற்றாக அமைந்துள்ளன. உடன்போக்கு மேற்கொண்ட தலைவியின் பிரிவை எண்ணி செவிலி வருந்தும் விதமாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.


·         முல்லைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்கள், கடிமனை சென்று வந்த செவிலி உள்ளம் உவந்து நற்றாயிடம் கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளன.


·         செவிலி கூற்றில் அமைந்த பாடல்களுள் கயமனார் என்னும் புலவர் பாடிய பாடல்களே அதிகமாக உள்ளன. சங்க இலக்கியத்துள் இப்புலவர் பாடிய பாடல்களாக மொத்தம் 23 பாடல்கள் கிடைக்கின்றன. இவற்றுள் புறத்திணையுள் அமைந்த புறநானூற்றுப் பாடல் ஒன்று, நெய்தல் திணையில் அமைந்த குறுந்தொகைப் பாடல் ஒன்று என இவ்விரண்டு பாடல்களைத் தவிர்த்து எஞ்சிய அனைத்தும் உடன்போக்கை முன்னிறுத்தி அமைந்த பாலைத்திணைப் பாடல்களே.


செவிலி கூற்று - தொல்காப்பியம் சொல்வது என்ன?


      தொல்காப்பிய இலக்கணத்தின் அடிப்படையில் களவு, கற்பு எனும் கைகோள் இரண்டிலும் கூற்று நிகழ்த்துவதற்கு உரியவளாகிறாள் செவிலித்தாய். அவள் களவில் கூற்று நிகழ்த்தும் இடங்களைத் தொகுத்துத்தருவனவாக ஒரு நூற்பாவும், கற்பில் கூற்று நிகழ்த்தும் இடங்களைத் தொகுத்துத்தருவனவாக ஒரு நூற்பாவும் இடம்பெற்றுள்ளன.


களவு அலர் ஆயினும் காமம் மெய்ப்படுப்பினும்


அளவு மிகத் தோன்றினும் தலைப்பெய்து காணினும்


கட்டினும் கழங்கினும் வெறி என இருவரும்


ஒட்டிய திறத்தான் செய்திக்கண்ணும்


ஆடிய சென்றுழி அழிவு தலைவரினும்


காதல் கைம்மிகக் கனவின் அரற்றலும்


தோழியை வினவலும் தெய்வம் வாழ்த்தலும்


போக்கு உடன் அறிந்த பின் தோழியொடு கெழீஇக்


கற்பின் ஆக்கத்து நிற்றற்கண்ணும்


பிரிவின் எச்சத்தும் மகள் நெஞ்சு வலிப்பினும்


இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும்


இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு


அன்னவை பிறவும் செவிலி மேன.


                              (தொல். பொருள். 113, இளம்.)


மேற்கண்ட தொல்காப்பிய நூற்பா களவில் செவிலித்தாய்க்குரிய கூற்று நிகழும் இடங்களைத் தொகுத்துத் தருகிறது. இதனடிப்படையில் ‘களவு அலர் ஆயினும்’ முதல் ‘இரு பால் குடிப் பொருள் இயல்பின்கண்ணும் ’ முடிய உள்ள பதின்மூன்று கிளவிகளும் அவை போல்வனவும் செவிலி கூற்றிற்கு உரியனவாக அமைகின்றன. செவிலி கூற்றாக அமையும் இக்கிளவிகள் அனைத்திலும் செவிலியின் மகளான தோழியே கேட்போளாக அமைகிறாள்.


கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள


நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்


செவிலிக்கு உரிய ஆகும் என்ப.


                              (தொல். பொருள். 151, இளம்.)


கற்பைப் பொருத்தளவில், இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலங்களிலும் தன் குடியிலுள்ளோர் வழிகொள்ளுமாறு நல்லவை கூறுதலும் அல்லவை நீக்குதலும் வேண்டும் எனக் அறிவுரை கூறும் தன்மையில் செவிலித்தாய்க்குரிய கூற்று நிகழும் எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. இவைபோக,


ஆய் பெருஞ் சிறப்பின் அரு மறை கிளத்தலின்


தாய் எனப்படுவோள் செவிலி ஆகும்.


                              (தொல். பொருள். 122, இளம்.)


தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்


கூறுதற்கு உரியர் கொள் வழியான.


                              (தொல். பொருள். 304, இளம்.)


பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி


சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு


அளவு இயல் மரபின் அறு வகையோரும்


களவின் கிளவிக்கு உரியர் என்ப.


                              (தொல். பொருள். 490, இளம்.)


போன்ற நூற்பாக்கள் செவிலியானவள் தாயாகவே கருதப்படுவாள் என்றும் தோழியும் செவிலியும் தமக்குப் பொருந்துவண்ணம் உவமையைச் சொல்ல வல்லவர்கள் என்றும் அகத்திணை மரபில்  பார்ப்பான், பாங்கன், தோழி, தலைவன், தலைவி என்னும் ஐவரோடு ஒருங்குவைத்து எண்ணப்படும் செவிலியின் வகிபாத்தினை விளக்குவனவாகவும் அமைந்துள்ளன. நிற்க,


      கட்டுரையின் பேசுபொருளுக்கு வருவோம். செவிலி கூற்றில் அமைந்த பாடல்களின் அமைப்பினைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக அப்பாடல்களில் வெளிப்படும் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தபோது அப்பாடல்கள், சில பொதுத்தன்மையின் கீழ் ஒருங்கிணைந்து வருவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. ஏற்கனவே சொன்னதற்கிணங்க இச்செவிலி கூற்றுப் பாடல்கள் பாலைத்திணை சார்ந்தவையாகவும் முல்லைத்திணை சார்ந்தவையாகவும் மட்டுமே உள்ளன. வசதி கருதி இப்பாடல்களின் அமைப்பினை அவற்றின் திணைசார்ந்து பாலை, முல்லை எனத் தனித்தனியே அணுகலாம்.


1) பாலைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்களின் அமைப்பு


      பாலைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்களில் காணலாகும் சில பொது அமைப்புகளைக் கண்டடைய அப்பாடல்களை அவற்றது கூற்றுவிளக்கத்தின் அடிப்படையில் பின்வரும் இரண்டு வகைகளாகப் பகுத்துகொள்ளலாம்.


அ) கூற்றுவகை-1: மகட்போக்கிய செவிலித்தாய் கூறியது


      மகள் தனது காதலனுடன் உடன்போக்கில் போய்விட அதனால் வருந்தும் செவிலித்தாய் ‘மகட்போக்கிய செவிலித்தாய்’ எனப்படுகிறாள். அவள் கூற்றாக அமைந்த பாடல்கள் மகட்போக்கிய செவிலித்தாய் கூறியனவாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் அமைந்தவையாகக் குறுந்தொகையுள் 5 பாடல்களும், அகநானூற்றில் 12 பாடல்களும் இடம்பெற்றுள்ளன. (இவற்றுள் அகநானூற்றின் 63 மற்றும் 369 ஆம் பாடல்கள் செவிலி தன் மகளிடம் சொல்வதாக அமைந்துள்ளன) இப்பாடல்களில் வெளிப்படுத்தப்படும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் அவற்றைப் பின்வரும் நான்கு அமைப்புகளுக்குள் பொருத்திவிட முடிகிறது.


அமைப்பு: 1 - தலைவியின் பிரிவை எண்ணி வருந்திக் கூறுதல்


      தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்ட தலைவியை எண்ணிச் செவிலியானவள் வருந்திக் கூறுதல் என்னும் பொதுப்பண்பின்கீழ் சில பாடல் கருத்துகள் அமைகின்றன. இப்பண்பையே அப்பாடல்கள் வெளிப்படுத்தும் அமைப்பாகக் கொள்ளமுடியும்.


      இவ்வகை அமைப்பின்கீழ் குறுந்தொகையின் 84 ஆம் பாடலும் அகநானூற்றின் 49, 63, 117, 321, 369, 385, 397 ஆகிய 8 பாடல்கள் அடங்குகின்றன.  எடுத்துக்காட்டாக,


      பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்;


      இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-


      கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்


      வேங்கையும் காந்தளும் நாறி,


      ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.


                              (மோசிகீரனார், குறுந்தொகை - 84)


என்னும் பாடலை எடுத்துக்கொள்ளலாம். இப்பாடலுள், ஆம்பல் பூவைப்போன்று மிகவும் மென்மையான என் மகள், நான் மீண்டும் மீண்டும் வாஞ்சையோடு அவளைத் தழுவிக்கொண்ட போது, ‘எனக்கு வியர்க்கிறது’ எனக் கூறினாள். அது அவள் வெறுப்பினால் கூறியது என அவள் உடன்போக்கு போன பின்னர்தான் தெரிந்துகொண்டேன், அவள் அவ்வாறு சொல்லிய பொழுது உணரவில்லை எனச் செவிலித்தாய் வருத்தத்துடன் கூறுவதாக அமைந்துள்ளது.


      மகள் உடன்போக்கு செல்லப்போகிறாள் என்பதை முன்னரே உணர்ந்துகொள்ள முடியாத நிலையில் செவிலிக்கு ஏற்படும் இந்த வருத்தத்தைப் போன்றே, தலைவியது திருமணத்தை நல்ல முறையில் தம் வீட்டில் தமர் அனைவரும் கூடியிருக்க நடத்தியிருக்கலாமே எனும்படியான செவிலியின் வருத்தமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே மிகவும் மென்மையன தலைவி உடன்போக்கின் போதும் திருமணத்திற்குப் பின்னரும் கடினமான வேலைகளை எவ்வாறு செய்யப்போகிறாள் எனும்படியான செவிலியின் வருத்தமும் இவ்வகை அமைப்பினுள் அமைகின்றன. 


அமைப்பு: 2 - இடைச்சுரவழியில் தலைவிக்கு ஏற்படும் இன்னல்களுக்கு இரங்குதல்


      தலைவி தலைவனுடன் உடன்போக்கு ஏகும் வழியில் அவளுக்கு ஏற்படும் இன்னல்களை மனதில்கொண்டு செவிலித்தய் இரங்குதல் என்பது அடுத்த பொதுப்பண்பாக அமைகிறது. இவ்வமைப்பினைக் குறுந்தொகையுள் அமைந்த 144 மற்றும் 378 ஆம் பாடல்களும் அகநானூற்றின் 89, 145, 153 ஆகிய பாடல்களும் உறுதிப்படுத்துகின்றன எடுத்துக்காட்டாக,


தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்,


உறு பெயல் வறந்த ஓடு தேர் நனந் தலை,


உருத்து எழு குரல குடிஞைச் சேவல்,


புல் சாய் விடரகம் புலம்ப, வரைய


கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்,


சிள்வீடு கறங்கும் சிறிஇலை வேலத்து


ஊழுறு விளைநெற்று உதிர, காழியர்


கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழிய,


களரி பரந்த கல் நெடு மருங்கின்,


விளர் ஊன் தின்ற வீங்குசிலை மறவர்


மை படு திண் தோள் மலிர வாட்டி,


பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய


திருந்து வாள் வயவர் அருந் தலை துமித்த


படு புலாக் கமழும் ஞாட்பில், துடி இகுத்து,


அருங் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர்,


வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்


கொல்லை இரும் புனம் நெடிய என்னாது,


மெல்லென் சேவடி மெலிய ஏக


வல்லுநள்கொல்லோ தானே தேம் பெய்து


அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள்,


இடு மணற் பந்தருள் இயலும்,


நெடு மென் பணைத் தோள், மாஅயோளே.


                              (மாங்குடி மருதனார், அகநனூறு - 89)


      இப்பாடலில் அமைந்த ‘தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின்’ என்னும் முதல் அடி முதல் ‘வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும்’ என்னும் அடிவரையிலும் தலைவியும் தலைவனும் உடன்போக்கு ஏகும் வழியின் கொடுமையைச் சொல்லி செவிலி வருந்துவது குறிக்கப்பட்டுள்ளது.


அமைப்பு: 3 - உடன்போக்கு சென்ற தலைவியின் துணிவை வியத்தல்


      தம் வீட்டில் இருக்கும் வரையிலும் மிகவும் மென்மையானவளாகவும் அமைதியானவளாகவும் கருதப்பட்ட தலைவி  எவ்வாறு இப்படி பிறிதொரு தலைவனுடன் உடன்போக்கு செல்லத் துணிந்தாள் என செவிலித்தாய் வியந்து வருந்தும் வண்ணமாக அமையும் பாடல்களைத் தனியொரு அமைப்பாகக் கொள்ளலாம். இப்பகுப்பினுள் அடங்குவனவாக குறுந்தொகையின் 356 மற்றும் 396 ஆம் பாடல்களும், அகநானூற்றின் 17 மற்றும் 189 ஆகிய பாடல்களும் வருகின்றன. சான்றாக,


நிழலான் றவிந்த நீரில் ஆரிடைக்


கழலோன் காப்பக் கடுகுபு போகி


அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த


வெவ்வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய


யாங்கு வல்லுநள்கொல் தானே ஏந்திய


செம்பொற் புனைகலத் தம்பொரிக் கலந்த


பாலும் பலவென உண்ணாள்


கோலமை குறுந்தொடித் தளிரன் னோளே.


                        (கயமனார், குறுந்தொகை - 356)


என்னும் குறுந்தொகைப்பாடலைக் கொள்ளலாம், செம்பொன்னால் செய்த பாத்திரத்தில் நல்ல பொரியுடன் கலந்த பாலைத் தரினும் அது மிகுதியாக உள்ளது என உன்ண மறுப்பவளும் தளிரன்னமெல்லியவளுமான தலைவி, நிழல் அடங்கி மறைந்து போன நீர் இல்லாத அரிய பாலைவழியில் கழலணிந்த தலைவன்  தன்னைக் காக்க விரைந்து நடந்து சென்று வற்றிய சுனையின் பக்கத்தே உலர்ந்து வெந்து கிடக்கின்ற மிக வெப்பமான கலங்கிய நிரை வேட்கை மிகுதியால் விரைந்து குடிப்பதற்குரிய நிலையை அடையும் வண்ணம் எவ்வாறு துணிந்தாள் என செவிலித்தாயானவள் தலைவியின் உடன்போக்கு ஏகும் துணிவை வியந்து கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.


ஆ) கூற்றுவகை: 2 - உடன்போக்கு சென்ற தலைமக்களைத் தேடிப் பின்தொடரும் செவிலி இடைச்சுர வழியில் சொல்லியது


      உடன்போக்கு சென்றுவிட்ட தலைமக்களைப் பின்தொடர்ந்து செல்லும் செவிலித்தாய் இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் பேசுதல், தன்னிடமே கூறிக்கொள்தல் என்னும் இருநிலையிலும் அமையும் பாடல்கள் இக்கூற்றுவகையுள் அடங்குகின்றன.


      நற்றிணையின் 192 ஆம் பாடலும், குறுந்தொகையில் 44 ஆம் பாடலும், ஐங்குறுநூற்றில் 389 ஆம் பாடலும், அகநானூற்றில்  7 ஆம் பாடலும் என மொத்தம் 4 பாடல்கள் இவ்வகையில் அமைகின்றன. இப்பாடல்களை இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் செவிலித்தாய் வருந்திக்கூறியது, தனக்குத்தானே வருந்திக் கூறியதுஎன இரு அமைப்புகளில் அணுகமுடியும்.


அமைப்பு: 1 - இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் செவிலித்தாய் வருந்திக்கூறுதல்


      இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் செவிலித்தாய் வருந்திக்கூறுதல் என்னும் இவ்வமைப்பில் வருவனவாக நற்றிணையின் 192 ஆம் பாடலும், ஐங்குறுநூற்றின் 389 ஆம் பாடலும் அமைகின்றன. காட்டாக,


செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்


மையணல் காளையொடு பைய இயலிப்


பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை


சென்றனள் என்றிர் ஐய


ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே.                    


                              (ஓதலாந்தையார், ஐங்குறுநூறு - 389)


      பெரியவர்களே, என் கண்மணியின் பாவை போன்றவள் என் மகள், அவள் தேர்ந்தெடுத்த தொடியை அணிந்தவள், வேலைப்பாடு அமைந்த கழலை அணிந்த பெருமுயற்சியும் கருத்த தாடியும் உடைய காலையோடு செல்கிறாள் என்றும் மெதுவாக நடக்கிறாள் என்று சொல்கிறீர்கள். அவளுடைய சிலம்பணிந்த கால்கள் நிலத்தில் படிந்தனவா படியவில்லையா? எனச் செவிலித்தாய் இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் வினவுவதாக அமைந்துள்ளது இப்பாடல். உண்மையில் அவள் துயறுற்றிருக்கிறாள அல்லது களிப்புடன் செல்கிறாளா என்பதைத்தான் இவ்வாறு வருத்தத்துடன் வினவுகிறாள் செவிலித்தாய்.


அமைப்பு: 2 - இடைச்சுரவழியில் செவிலித்தாய் தனக்குத்தானே வருந்திக் கூறுதல்


      இடைச்சுரவழியில் செவிலித்தாய் தனக்குத்தானே வருந்திக் கூறுதல் என்னும் அமைப்பின்கீழ் குறுந்தொகையின் 44 ஆம் பாடலும், அகநானூற்றின் 7 ஆம் பாடலும் அமைகின்றன. காட்டாக,


காலே பரிதப் பினவே கண்ணே


நோக்கி நோக்கி வாளிழந் தனவே


அகலிரு விசும்பின் மீனினும்


பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.


                        (வெள்ளிவீதியார், குறுந்தொகை - 44)


என் கால்கள் நடந்து நடந்து ஒரு சீராக அடியெடுத்து வைக்க முடியாமல் தவறுகின்றன, கண்களோ, முன்னே இணை இணையாக வருபவர்கள் என் மகளும் அவள் காதலனுமோ என எண்ணிப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து பூத்துப் போயின, பார்ப்பவரெல்லாம் மற்றவர்களாகத் தெரிவதால் நிச்சயமாக இந்த உலகத்தில் அவர்கள் இருவர் அல்லாத பிறர் அகன்ற பெரிய வானத்தில் தோன்றும் மீன்களைவிடப் பலரேயாவர். என வருந்திச் சொல்வதன்ழி அவர்களை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை என சொள்கிறாள் செவிலித்தாய்.


2) முல்லைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்களின் அமைப்பு


      முல்லைத்திணையில் அமைந்த செவிலி கூற்றுப் பாடல்களாகக் குறுந்தொகையில், 167 மற்றும் 242 ஆகிய இரண்டு பாடல்களும், ஐங்குறுநூற்றில் செவிலி கூற்று பத்து என்னும் பத்தின்கீழ் அமைந்த 401 முதல் 410 வரையிலான பத்துப் பாடல்களும் என மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இப்பாடல்களின் கூற்றுவகை என்பது முறையே ‘கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது’ என்பதும் ‘கடிமனை சென்றுவந்த செவிலி உவந்த உள்ளத்தளாய் நற்றாய்க்குச் சொல்லியது’ என்பதும் அமைகின்றன.


      இப்பாடல்கள் அனைத்தும் ஒரே கூற்றுவகையின் அடிப்படையில் அமைந்துள்ள காரணத்தால் இப்பாடல்களின் அமைப்பையும் ஒரே தன்மையில் அமைத்துவிடமுடிகிறது.


அமைப்பு: தலைவியின் இல்லறச் சிறப்பைக் கண்டுவந்த செவிலி நற்றாயிடம் உவந்து சொல்லுதல்


      தலைவியின் இல்லறச் சிறப்பைக் கண்டுவந்த செவிலி நற்றாயிடம் உவந்து சொல்லுதல் என்னும் இவ்வமைப்பிற்குச் சான்றாகப் பின்வரும் குறுந்தொகைப்பாடலைக் கொள்ளலாம்,


முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்


கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்


குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்


தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்


இனிதெனக் கணவ னுண்டலின்


நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே.


                              (கூடலூர் கிழார், குறுந்தொகை - 167)


பரவலாக அறியப்பட்ட இக்குறுந்தொகைப் பாடல், தலைவி தான் இல்லறம் நடத்தும் மனையில் தன் கணவனுக்காக வருந்தி தன் காந்தள் மலர்போன்ற விரள்களைப் பயன்படுத்தி தயிரைப் பிசைந்தாள் பின்னர் அவ்விரல்களை நீரில் கழுவாது தன் பட்டாடையில் துடைத்துக்கொள்கிறாள். அப்பட்டாடையை மாற்றாது விரைந்து சமயல் செய்யத் தொடங்கிவிடுகிறாள். பின்னர் குவளை மலர் போலும் மை தீட்டிய தன் கண்களில் புகை பட்டுப் பரவும் வகையில் தானாகவே முயன்று சமைத்த இனிமையான புளிக்குழம்பை, அவள் புதிதாக சமயல் பழகிக்கொண்டிருப்பவள் எனினும் அவளது கணவன் இனிதாக இருக்கிறது எனச் சொல்லி உண்கிறான், அவனது அன்பு மொழியைக் கேட்டு ஒளிபொருந்திய நெற்றியை உடைய அவளது முகம் நுட்பமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது, எனத் தான் கண்ட காட்சியை நற்றாயிடம் விவரிக்கிறாள் செவிலித்தாய்.


      ஏனய மூன்று பாடல்களும் தனித்தனி கூற்று வகைகளில் அமைவதால் ஒன்றிற்கும் மேற்பட்ட பாடல்கள் கிடைக்கப்பெறாத நிலையில் அவற்றின் பொதுப்பண்பை முன்னிறுத்தியதான அமைப்பை இனங்காண்பது முடியாததாகிறது.


முடிவு


      சங்க இலக்கியப் பரப்பினுள் அமைந்துள்ள செவிலி கூற்றுப் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்கிடையே காணப்பட்ட பொதுமைக் கூறுகளை முன்னிறுத்தி அவற்றிற்கான ஒரு அமைப்பினை உருவாக்கிக்கொள்ளும் இம்முயற்சியின் விளைவாகச்  சில முடிவுகளைப் பெற முடிந்தது.


      முதலாவதாகக், களவில் செவிலித்தாய்க்குரிய கூற்றாகத் தொல்காப்பியம் முன்வைத்தவற்றுள் பெருபாலானவற்றிற்கான சான்றாக அமையும் பாடல்கள் சங்க இலக்கியத்தினுள் கிடைக்கவில்லை.


      கற்பைப் பொருத்தமட்டில் செவிலித்தாய் முக்காலத்திற்கும் நன்மை பயக்கும் வழிமுறைகளைத், தலைவன், தலைவி ஆகியோருக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதாகப் பொதுப்படத் தொல்காப்பியத்துள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் தலைவன் தலைவியருக்குச் செவிலித்தாய் அறிவுரை வழங்கும் தன்மையில் அமையும் செய்யுள்கள் எதுவும் சங்க இலக்கியப் பரப்பினுள் கிடைக்கவில்லை. தலைவியின் கற்பு கால வாழ்வைக் கண்டு உவந்து நற்றாயிடம் செவிலித்தாய் கூறுவதான பாடல்களே சங்க இலக்கியப் பரப்பினுள் கிடைத்துள்ளன.


      செவிலித்தாய் கூற்றில் அமைந்த பாலைத்திணைப் பாடல்கள் பெரும்பாலும் 1.தலைவியின் பிரிவை எண்ணி வருந்திக் கூறுதல், 2.இடைச்சுரவழியில் தலைவிக்கு ஏற்படும் இன்னல்களுக்கு இரங்குதல், 3.உடன்போக்கு சென்ற தலைவியின் துணிவை வியத்தல், 4.இடைச்சுரவழியில் எதிர்பட்டோரிடம் செவிலித்தாய் வருந்திக்கூறியது, 5.இடைச்சுரவழியில் செவிலித்தாய் தனக்குத்தானே வருந்திக் கூறியது ஆகிய பொதுப்பொருண்மைகளுக்குள் அடங்கிவிடுகின்றன.


      செவிலித்தாய் கூற்றில் அமைந்த முல்லைத்திணைப் பாடல்கள் அனைத்தும் தலைவியின் இல்லறச் சிறப்பைக் கண்டுவந்த செவிலி நற்றாயிடம் உவந்து சொல்லுதல் என்னும் பொதுப்பொருண்மையுள் அடங்கிவிடுகின்றன.


      பாலைத்திணை சார்ந்த செவிலி கூற்றுப் பாடல்களில் உடன்போக்கு சென்ற தலைவி குறித்ததான செவிலித்தாயின் வருத்தமே வெளிப்படுகிறது. மாறாக முல்லைத்திணை சார்ந்த செவிலி கூற்றுப் பாடல்களில், இனிது இல்லறம் நடத்தும் தலைவியின் சிறப்பை எண்ணி மகிழும் செவிலித்தாயின் உவகை வெளிப்படுகிறது.


      ஒரு துறை சார்ந்த அல்லது ஒரு பொருண்மை சார்ந்த சங்கப்பனுவல்களில் இழையோடும் பொதுப்பண்புகளை இனங்கண்டு அவற்றை ஒரு அமைப்பிற்குள் பொருத்திப்பார்ப்பதற்கான களங்கள் சங்க இலக்கியப்பரப்பினுள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன என்பது செவிலி கூற்றாக அமைந்த பாடல்களை அவ்வாறு அணுகியதிலிருந்து ஊகிக்க முடிகிறது.


      சங்க இலக்கிய பனுவல்களை இவ்வாறு பொதுமைப்படுத்திப்பார்ப்பது என்பது அடிப்படையில், அப்பனுவல்களின் உட்கருத்தைப் பொதுமைப்படுத்திப்பார்க்கும் தூண்டுதலின் விளைவேயாகும். மாறாக இவ்வாறு ஒரு அமைப்பின் அடிப்படையில்தான் சங்கப்பனுவல்கள் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்னும் வாதத்தினை முன்வைப்பதற்கல்ல.


      இதுபோன்ற முயற்சிகள் சங்க இலக்கியப் பரப்பினுள் அமையும் அனைத்து பனுவல்களின் மீதும் முன்னெடுக்கப்படும்போது சங்கப்பனுவல்களின் பாடுபொருள் சார்ந்த ஒரு புதிய கருத்துருவாக்கத்திற்குச் சென்றடையமுடியும்.


துணைநூற் பட்டியல்


1. அண்ணாமலை, சுப., (உ-ர்), 2003, சங்க இலக்கியம் - கலித்தொக, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.


2. ------- (உ-ர்), 2003, சங்க இலக்கியம் - அகநானூறு மணிமிடைபவளம், கோவிலூர் மடாலயம், கோவிலூர்


3. கோபாலையர், தி. வே., அரணமுறுவல் ந. (ப-ர்), 2003. தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.


4. சஞ்சீவி, ந., டாக்டர், 1973. சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள்,  சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.


5. சாமிநாதையர், உ.வே. (உ-ர்), 2009. குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை - 90


6. சாமிநாதையர், உ.வே. (ப-ர்), 2012. ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும், டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை - 90


7. பாலசுப்பிரமணியம், கு. வெ. (மொ-ர்), 2009. சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.(ஆங்கில மூலம் - Tradition and Talent in Cankam Literature (Ph. D.) by Dr. RM. Periakaruppan (Thamizhannal)).


8. மகாதேவன், கதிர். (உ-ர்), 2003, சங்க இலக்கியம் - நற்றிணை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.


9. மீனாட்சிசுந்தரம், நா., (உ-ர்), 2003, சங்க இலக்கியம் - அகநானூறு நித்திலக்கோவை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.


10. முருகசாமி, தெ., (உ-ர்), 2003, சங்க இலக்கியம் - அகநானூறு களிற்றுயானை நிரை, கோவிலூர் மடாலயம், கோவிலூர்.


  
11. வசந்தாள், த., 1990, தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் ஒரு வரலாற்றுப் பார்வை, சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

x


Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்