இடத்தொடு சிவணி ஐம்பாற்கும் உரிய


தமிழ் இலக்கண உலகில் சொல்லிலக்கணம் காலந்தோறும் மிகுந்த ஈடுபாட்டோடு விவாதிக்கப்பட்டு வந்துள்ளது என்பது அவ்விலக்கணத்திற்கென எழுந்த நூல்களின் பெருக்கத்தாலும், தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர்களின் எண்ணிக்கை மிகுதியாலும் தெற்றெனப் புலப்பட்டுள்ளது. எனினும் சொல்லிலக்கணம் பற்றிப் பேசும் தமிழ் இலக்கண நூல்கள் அனைத்தும் காலந்தோறும் தமிழ்மொழியில் ஏற்பட்டுள்ள சொல்லிலக்கண மாற்றங்கள் அனைத்தையும் சரியாகத் தம் நூலுள் பதிவு செய்துள்ளனவா என்பது ஆய்விற்குரியதே. சொல்லிலக்கணம் பேசும் தமிழ் மரபிலக்கணங்கள் தம்முள் சில இடங்களில் மாறுபாடான கருத்துகளைக் கொண்டமைந்துள்ளன. தொல்காப்பியம் முதலிய சொல்லிலக்கண நூல்களுள் சில வினைச்சொற்களைப் பற்றிப் பேசும் பகுதியில் வினைச்சொற்களுள் சில ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாய் அமையும் என்கின்றன. ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாக அமையும் சொற்கள் இவை இவை என்று வகைப்படுத்திய இடத்தில் அந்நூல்களிடையே வேறுபாடு காணப்படுகிறது. ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாகச் சொல்லிலக்கணங்கள் குறிக்கும் சொற்களைத் தொகுத்துக் காண்பதன் மூலம் அவற்றிற்கிடையேயான வேறுபாடு தமிழ்மொழியில் கால வளர்ச்சிக்கு ஏற்ப நிகழ்ந்து வந்த சொல்லிலக்கண மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு செயல்பட்டுள்ளதா? என்ற வினாவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது இக்கட்டுரை.
தமிழ் இலக்கணங்கள் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பகுத்துள்ளன. அவற்றுள் வினைச்சொல்லைத் தெரிநிலை வினைமுற்றுகள், குறிப்பு வினைமுற்றுகள், எச்சங்கள் என்றவாறு பாகுபடுத்தி ஆராய்கின்றன. தெரிநிலை வினைமுற்றுகளையும் குறிப்பு வினை முற்றுகளையும் உயர்திணைக்குரியன, அஃறிணைக்குரியன, இருதிணைக்கும் பொதுவான விரவுவினையாக அமைவன என்று மேலும் வகைப்படுத்துகின்றன.
            விரவுவினைகள் என்பவை உயர்திணை, அஃறிணை ஆகிய இருதிணைக்கும் உரிய வினைகளாகும். விரவு வினை என்ற பகுப்பினுள் தொல்காப்பியர் கருத்துப்படி முன்னிலை வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று, வினையெச்சம், இல்லை என்னும் சொல், வேறு என்னும் சொதல், செய்ம்மன என்னும் வாய்ப்ட்டு முற்று, செய்யும் என்னும் வாய்பாட்டு முற்றும் எச்சமும் செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம் என்னும் எட்டும் அமைகின்றன.
            முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி
            இன்மை செப்பல் வேறென் கிளவி
            செய்ம்மன செய்யுஞ் செய்த வென்னும்
            அம்முறை நின்ற ஆயெண் கிளவியும்
            திரிபுவேறு படூஉஞ் செய்திய வாகி
            இருதிணைச் சொற்குமோ ரன்ன வுரிமைய. (தொல்.சொல்.222)
என்ற நூற்பாவில் விரவுவினையாக அமையும் மேற்சுட்டிய எட்டையும் தொகுத்துள்ளார் தொல்காப்பியர். அடுத்த இரு நூற்பாக்களில் அந்த எட்டினுள் முன்னிலை வினைமுற்றிற்கு விலக்காக அமையும் இரு இடங்களைக் கூறுகிறார். அதனைத் தொடர்ந்து,
            எஞ்சிய கிளவி யிடத்தொடு சிவணி
            ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே (தொல்.சொல்.225)
என்றவழி இருதிணைக்கும் உரியனவாக அமைந்த மேற்சுட்டிய எட்டினுள் திணை, எண், பால் காட்டு விகுதிகளை ஏற்கும் முன்னிலை வினையைத் தவிர ஏனைய ஏழும் ஐம்பாற் மூவிடத்திற்கும் உரியனவாக அமையும் என்று வரையறை செய்துள்ளார்.
            ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக வரும் ஏழனுள் வியங்கோள் என்பது தன்மை, முன்னிலை ஆகிய இடங்களில் வராது எனத் தொடர்ந்துவரும் நூற்பாவில் ஒரு விதிவிலக்கு செய்துள்ளார் தொல்காப்பியர். தொல்காப்பிச் சொல்லதிகார உரையாசிரியர்களுள் ஏனைய உரையாசிரியர்கள் அனைவரும் வாழ்த்தல், வேண்டல் பொருள்களில் தன்மை, முன்னிலை இடங்களிலும் வியங்கோள் சிறுபான்மையாக வரும் எனக் கொள்கின்றனர். இதன்வழி வியங்கோளும் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதே என்பதை உரையாசிரியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
            அடுத்ததாக உள்ள செய்ம்மன வாய்பாட்டு முற்று இளம்பூரணர் காலத்திலேயே வழக்குப்பயிற்சி குன்றிவிட்டதை ‘அவற்றுள், செய்ம்மன என்பது இப்பொழுது வழக்கரிது’. (தொல்.சொல்.217.இளம்.உரை) என்னும் அவரது உரையின்வழித் தெரிந்துகொள் முடிகிறது. ‘இஃது இக்காலத்துச் செய்வது, செய்வன, செய்பவை, செய்யுமவை என வழங்கும்போலும்’ (தொல்.சொல்.219.தெய்வச்.உரை) என்பதாக அமைந்த தெய்வச்சிலையார் உரை செய்ம்மன என்பதற்கு ஒரு புது விளக்கத்தை அளித்துள்ளது.
            வியங்கோள், செய்ம்மன என்னும் வாய்பாட்டு முற்று என்னும் இந்த இரண்டும் போக எஞ்சியவற்றுள் இல்லை, வேறு என்பவை இரண்டும் குறிப்புவினைகள், மற்றவை வினையெச்சம், செய்த என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம், செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சமும் முற்றும் ஆகும். இவையே தொல்காப்பியரால் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமையும் வினைகள் என இனங்காட்டப்பட்டவை.
            தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரியர்கள் ஐவரது கருத்தும் இதுவே. தெய்வச்சிலையார் ஒருவர் மட்டும் ‘வந்தது கண்டு வராதது முடித்தல்’ என்னும் உத்தியால் ‘கூட்டு’ என்ற சொல்லையும் ‘ஆம்’ என்ற சொல்லையும் இவற்றோடு இணைத்துள்ளார். எனினும் இச்சொற்களுக்கான இலக்கியச் சான்றுகள் எதையும் தம் உரையுள் அவர் இணைக்கவில்லை.
தொல்காப்பியத்திற்குப் பின்னர் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய நேமிநாதம் தொடங்கிய இலக்கண நூல்கள் ஐம்பால் மூவிடங்களுக்கும் உரிய சொற்களாகச் சுட்டியவற்றைத் தொகுத்துத் தருவதாகப் பின்வரும் பகுதி அமைகிறது.
            ஆறன்மேற் செல்லும் பெயரெச்சம் அன்றல்ல
            வேறில்லை யுண்டு வியங்கோளும் தேறும்
            இடமூன்றோ டெய்தி யிருதிணையைம் பாலும்
            உடனொன்றிச் சேர்தலும் உண்டு.             (நேமிநாதம்.69)
என்னும் நேமிநாத நூற்பாவழி அதனை இயற்றிய குணவீரபண்டிதர் தம் காலத்தில் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்த சொற்களை எடுத்துக்காட்டியுள்ளார். இவரது பட்டியலில் தொல்காப்பியர் சுட்டிய வினையெச்சமும், செய்ம்மன என்னும் வாய்பாட்டு முற்றும் விடப்பட்டுள்ளன. அன்று, அல்ல, உண்டு என்னும் மூன்று குறிப்பு வினைச்சொற்களும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
            நேமிநாத ஆசிரியரால் புதிதாக இணைக்கப்பட்ட அன்று, அல்ல, உண்டு என்ற மூன்றும் தொல்காப்பியரால் அஃறிணைக்குரிய குறிப்புவினைகளாகச் சுட்டப்பட்டவையாகும். தொல்காப்பியத்தின்படி அன்று, உண்டு உன்ற இரண்டும் அஃறிணை ஒருமைக்கும், அல்ல என்பது அஃறிணை பன்மைக்கும் என வரையறுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில் பரவலாகப் பயின்று வந்துள்ள இவை மூன்றும் தொல்காப்பிய வரையறையைக் கடந்தும் வந்துள்ளன. சான்றாக,
            வல்வேற் காந்தன் நல்லிசை யல்ல (719.புறம்380) என்பதில் அஃறிணை ஒருமைக்குரிய அன்று வரவேண்டிய இடத்தில் அஃறிணைப் பன்மைக்குரிய அல்ல வந்துள்ளது.
            நின்னினும் நல்லன் அன்றே (2244 புறம். 66) என்றவிடத்து நின்னினும் நல்லன் அல்லனே என்று அமைவதற்குப் பதில் நின்னினும் நல்லன் அன்றே என்று வந்துள்ளது.
            இனச்சுட்டில்லாப் பண்புகொள் பெயர்க்கொடை
            வழக்கா றல்ல செய்யுளாறே (தொல்.சொல்.18)
என்னும் தொல்காப்பிய நூற்பாவிலேயே அஃறிணை ஒருமையாக அமைந்த வழக்காறு என்னும் எழுவாய் அன்று என்னும் அஃறிணை ஒருமைக்குறிப்புவினைக்குப் பதில் அல்ல என்னும் அஃறிணைப் பன்மைக்குரிய குறிப்புவினையையே தழுவியுள்ளது. மேலுமுள்ள சான்றுகள் கட்டுரையின் அளவு கருதி விடப்பட்டுள்ளன. உண்டு என்ற சொல் ஐம்பால் மூவிடத்திலும் பயின்று வந்துள்ளமைக்கான சான்றுகளை நன்னூல் 338 ஆம் நூற்பா மயிலைநாதர் உரையில் காணலாம்.
            இனி நன்னூலில் வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன (நன்னூல்.338) என்ற நூற்பாவின் வழி நன்னூலார் ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக அமையும் குறிப்புவினைகள் மூன்றையும் முதலில் தொகுத்துள்ளார்.
            செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற்
            காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
            செய்தாதி யறுபொருட் பெயரும்
            எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே. (நன்னூல்.339)
 
            தொழிலும் காலமுந் தோன்றிப் பால்வினை
            ஒழிய நிற்பது வினையெச் சம்மே. (நன்னூல்.341)
என்கின்ற நூற்பாக்களின் வழி இருவகை எச்சங்களின் இலக்கணத்தைச் சுட்ட வந்த நன்னூலார் பெயரெச்சத்திலும் வினையெச்சத்திலும் பால் தோன்றாது எஞ்சி நிற்கும் என்ற குறிப்பையும் தந்துள்ளார். பால் தோன்றாது நிற்கும் என்றதனால் அவை இடத்தையும் குறிக்காமலேயே அமையும் என நாம் கொள்வதற்கு இடமுண்டு.
            கயவொடு ரவ்வொற்றீற்ற வியங்கோள்
            இயலும் இடம்பால் எங்கும் என்ப. (நன்னூல்.337)
என்ற நூற்பாவின் வழி வியங்கோளும் பால் இடங்கள் அனைத்திற்கும் பொருந்தி வரும் என்பதும் நன்னூலார் கருத்தாகியுள்ளது. இதன்வழி ஐம்பால் மூவிடத்திற்கும் உரியனவாக நன்னூலார் தொகுத்தவை வியங்கோள், வேறு, உண்டு, இல்லை, பெயரெச்சம், வினையெச்சம் என்பவை மட்டுமே. தொல்காப்பியம் தொகுத்த செய்ம்மன வாய்பாட்டு முற்றையும் நேமிநாதம் தொகுத்த அன்று, அல்ல என்பதையும் நன்னூலார் விட்டுள்ளார். தொல்காப்பியர் சுட்டாது நேமிநாதர் குறித்துள்ள உண்டு என்பதைத் தழுவிக்கொண்டுள்ளார். புதிதாக எதையும் இப்பகுப்பினுள் இணைக்கவில்லை.
            இலக்கண விளக்க நூலாசிரியரான வைத்தியநாத தேசிகரும்  நன்னூலாருடன் ஒத்த கருத்துடையவராகவே இருந்துள்ளார். இதனை,
            கயவொடு ரவ்வொற்று அல் ஆல் உம் மார்ச்       
            ஐகான் ஈற்ற வியங்கோள் முற்றவை
            எய்தும் இடம் பால் எங்கும் என்ப.  (இலக்.விளக்.239)
 
            வேறு இன்மை உண்டு ஐம்பான் மூவிடத்தன.(இலக்.விளக்.240)
என்ற இலக்கண விளக்க நூற்பாக்களால் தெளியலாம். ஆனால் இலக்கண விளக்க ஆசிரியர் எச்சங்கள் குறித்த நூற்பாவில் அவை பால், இடங்களுக்குப் பொதுவாய் அமையும் என நேரடியாக்க் குறிக்கவில்லை. இருவகை எச்சங்களும் ஐம்பால் மூவிடங்களுக்கும் பொது என்பது யாவரும் அறிந்த்தே என்ற எண்ணத்தின் காரணமாக அவற்றை விட்டிருக்கலாம் என்று அமைதி காண்பதில் தவறில்லை.
            வேறு இல்லை உண்டு யார் வேண்டும் தகும் படும்
            வினை, பெயரெச்சம் வியங்கோள் பத்தும்
            திணைபால் இடமெல்லாம்  செல்லும் என்ப. (இலக். கொத்து.85)
என்னும் இலக்கணக் கொத்து நூற்பாவின்வழிச் சுவாமிநாத தேசிகர், வேறு , இல்லை, உண்டு, யார், வேண்டும், தகும், படும், வினையெச்சம், பெயரெச்சம், வியங்கோள் என்ற பத்தும் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமையும் எனத் தெளிவுபடுத்தியுள்ளார். யார், வேண்டும், தகும், படும் என்னும் நான்கு சொற்களைப் புதிதாக இப்பட்டியலில் இணைத்துள்ளார் இவர். ‘வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன’ என்னும் நன்னூல் நூற்பாவிற்கு இலக்கணக் கொத்து ஆசிரியரின் இக்கருத்தைத் தழுவிய சிவஞான முனிவர் ‘இனி மொழிந்த பொருளோடு ஒன்ற அவ்வயின் மொழியாததனை முட்டின்று முடித்தல் என்பதனால் வேண்டும், தகும், படும் என்னும் சொற்களும் ஐம்பால் மூவிடத்தனவாம் எனவும் கொள்க.’ (நன்னூல்.339. சிவஞான முனிவர் விருத்தியுரை) என்றவாறு உரையமைத்து இலக்கியச் சான்றுகளையும் இணைத்துள்ளார்.
            சொல்லிலக்கணம் கூறும் மற்ற நூல்களான வீரசோழியம், பிரயோக விவேகம், தொன்னூல் விளக்கம், முத்து வீரியம் ஆகியவை வினைச்சொற்களை விளக்குமிடத்து ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமையும் வினைகளாக எதையும் காட்டவில்லை என்பது இங்குக் கவனிக்கத்தக்கது.
            முடிவாக, மேற்சொன்னவைகளையெல்லாம் நிரல்படுத்திப் பார்த்த்தில் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்த வினைகளைத் தொகுத்த தமிழ்ச் சொல்லிலக்கண நூல்களிடையே இரண்டு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
1.    ஏற்கெனவே ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமையும் சொற்களாக முன்னர் தோன்றிய இலக்கணங்கள் குறித்த சொற்களுள் தம் காலத்தில் பொருந்தாத சிலவற்றைப் பின்வந்த இலக்கணங்கள் தவிர்த்துவிடுதல்.
2.    பின்வந்த இலக்கணங்கள் தம் காலத்தில் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்துவிட்ட புதிய சொற்களைத் தம் நூலுள் சேர்த்துக் கொள்ளுதல்.
ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்த வினைகள் எனத் தொல்காப்பியர் சுட்டியவை ஏழு, அவற்றுள் செய்ம்மன என்ற வாய்பாட்டு முற்று இளம்பூரணர் காலத்திலேயே வழக்கிழந்துவிட்டது. எனவே பின்வந்த இலக்கண நூல்களில் இம்முற்றுவடிவம் ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்த சொல் தொகுதியிலிருந்து முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. இம்மாற்றம் பொருத்தமான ஒன்றே.
            தொல்காப்பியருக்குப் பின் உரையாசிரியர்களுள் தெய்வச்சிலையார், இலக்கண நூலாசிரியர்களுள் நேமிநாத்த்தை இயற்றிய குணவீரபண்டிதர், இலக்கணக் கொத்து நூலை இயற்றிய சுவாமிநாத தேசிகர் என இம்மூவர் மட்டுமே ஐம்பால் மூவிடத்திற்கும் பொதுவாக அமைந்த சொல்தொகையில் புதிதாகச் சில சொற்களை இணைத்துள்ளனர்.இவர்களுள் இலக்கணக் கொத்து ஆசிரியர் மட்டுமே தாம் இணைத்துக் கொண்ட புதிய சொற்களுக்கான இலக்கியச் சான்றுகளைத் தந்துள்ளார். மற்ற இருவரும் சான்றுகளைத் தாமே செய்துள்ளனர். எனினும் இவர்களது இணைப்பு பொருந்தக் கூடியதே.
            ஐம்பால் மூவிடத்திற்கும் பொது எனத் தொல்காப்பியரால் தொகுக்கப்பட்ட வினையெச்சம் பின்வந்த நேமிநாத ஆசிரியரால் தம் நூலுள் விடப்பட்டுள்ளது. தொல்காப்பியரால் முறையே அஃறிணை ஒன்றன்பால் குறிப்பு வினைமுற்றாகவும் அஃறிணைபலவின்பால் குறிப்பு வினைமுற்றாகவும் சுட்டப்பட்ட அன்று, அல்ல என்ற இரணடும் சங்க இலக்கியத்திலும் பின்வந்த இலக்கியங்களிலும் பயின்றுவந்த இடங்கள் சிலவற்றில் தொல்காப்பிய வரையறையிலிருந்து சிறிது மாறுபட்டு, பொதுவினையாகவும் வந்துள்ளன. மேலும் அவையிரண்டும் நேமிநாத ஆசிரியரால் ஐம்பால் மூவிடத்திற்கும் பொது எனவும் கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அவையிரண்டும் நன்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக் கொத்து ஆகிய இலக்கண நூல்களில் விடப்பட்டுள்ளன.
            நேமிநாத்த்தில் வினையெச்சம் விடப்பட்டதற்கும் நன்னூல், இலக்கணவிளக்கம், இலக்கணக் கொத்து ஆகிய நூல்களில் அன்று, அல்ல ஆகியவை தவிர்க்கப்பட்டதற்கும் சரியான காரணம் புலனாகவில்லை. தமிழ் இலக்கணத்தில் காணப்படும் இவ்வாறான இடங்களைக் கவனித்து அவற்றை மேலும் ஆராய்ந்து தெளிவு காணவேண்டியுள்ளது. அதுபோலவே தற்காலத் தமிழில் ஐம்பால் மூவிடங்களுக்கும் பொதுவாக அமைந்துள்ள வினைகளைத் தொகுத்து ஆராய்வதும் அவசியமானதாகும். இவ்வாறான பணிகளைச் செய்வது தமிழாய்வினை மேலும் வளப்படுத்தும்.
துணைநின்ற நூல்கள்
1.    கோபாலையர், தி.வே., அரணமுறுவல், ந.(ப-ர்), தொல்காப்பியம், சொல்லதிகாரம் (பழைய உரைகள் முழுவதும்), 2000, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
2.    கோபாலையர், தி.வே., (ப-ர்), இலக்கணக் கொத்து, 1990, சரஸ்வதி மகால் நூல்நிலையம், தஞ்சாவூர்.
3.    சாமிநாதையர், உ.வே., (ப-ர்), நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும், 1995, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சா.நூல்நிலையம், சென்னை.
4.    சீனிவாசனார், ச.(ப-ர்), நேமிநாதம் மூலமும் உரையும், 2004, (வெளியீட்டாளர் எம்.வெற்றியரசி) , சென்னை.
5.    சுப்பிரமணியன், ச.வே., இலக்கணத் தொகை - சொல், 1971, 9வெளியீட்டாளர் திருமதி பார்வதி அம்மாள்), திருவனந்தபுரம்.
6.    சுப்பிரமணியன், ச.வே., வீரசோழியம் ஒரு திறனாய்வு - மூலமும் கருத்து, 1977, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
7.    தாமோதரன், அ.(ப-ர்), பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கர நமச்சிவாயர் செய்து சிவஞான முனிவரால் திருத்தப்பட்ட புத்தம்புத்துரை என்னும் விருத்தியுரையும், 1999, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
8.    வையாபுரிப்பிள்ளை, ச., (ப-ர்), சங்க இலக்கியம் முழுவதும் (பாட்டும் தொகையும்), 2005, முல்லை நிலையம், சென்னை.
x

Comments

Popular posts from this blog

தொல்காப்பியமும் அகராதியியலும் (பேரா. பா. ரா. சுப்பிரமணியன் அவர்களுடன் இணைந்து எழுதியது)

நச்சினார்க்கினியரின் தொல்காப்பியச் சொல்லதிகார உரை

தொல்காப்பிய உரையாசியர்களின் எடுத்துரைப்பியல்