ஈரான் - ஒரு நேரடி அனுபவம் (மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல் குறித்த குறிப்புகள்)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மனித சமூகம் பெற்ற அறிவியல் வளர்ச்சியின் தாக்கமானது நவீனமயப்படுத்தப்பட்ட பல சிந்தனைப் போக்குகளை உற்பத்தி செய்தது. இத்தகுச் சிந்தனைப் போக்குகள் பதிபுத்துறையிலும் விரும்பத்தக்க பல மாற்றங்களைக் கொண்டுவந்தன. புத்தகம், பத்திரிகை உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு, பதிப்பு, பரவலாக்கம் உள்ளிட்டச் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்த சூழலில்தான் இதழ்களில் வெளியான கேலிச்சித்திரங்கள், கருத்துப்படங்கள் உள்ளிட்டவற்றை அடியொற்றிப் புனைவிலக்கியமும் ஓவியங்களும் இணைந்த வடிவமான சித்திரக்கதை என்னும் வகை தோற்றம்பெற்றது.
1895-வாக்கில் தனக்குரிய
தனித்த வடிவத்தைப் பெற்றுவிட்ட சித்திரக்கதை விரைவில் பரவலான வாசகர்களையும்
பெற்றுவிட்டது. இவ்வரவேற்பை ஒட்டி 1950-களில் தமிழ்ச்
சூழலிலும் சித்திரக்கதை வெளியீட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. புராணக் கதைகள், சாகசக் காட்சிகள் நிறைந்த வீரதீரக்கதைகள், மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள் என்ற தன்மையிலேயே
பெரும்பாலும் அவை அமைந்திருந்தன. இருப்பினும் தற்பொழுது மேலைநாடுகளில் வளர்ச்சிபெற்றுவரும்
வடிவமாகத் திகழும் வரைபடப் புனைவு (Graphics novel) என்பதற்கு இணையான எந்தவொரு
ஆக்கமும் இதுவரைத் தமிழ்ச்சூழலில் தோற்றம்பெறவில்லை. இவ்வகையில் மொழிபெயர்ப்புச்
செய்யப்பட்ட ஓரிரு முயற்சிகளே நடந்துள்ளன.
வரைபடப் புனைவைப்
பொறுத்தமட்டில் தமிழில் செய்யப்பட்ட குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளுள் எஸ். பாலச்சந்திரனால்
ஆங்கிலத்தின்வழி தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட ஈரான்-ஒரு குழந்தைப் பருவத்தின் கதை,
ஈரான்-திரும்பும் காலம் என இரு தொகுதிகளாக வெளிவந்த, மர்ஜானே சத்ரபியின் வரைபடப்
புனைவும் ஒன்று. தமிழில் செய்யப்பட்ட நல்ல
முயற்சியான இது விடியல் பதிப்பகத்தின் வாயிலாக 2005 ஆம் ஆண்டு
வெளியிடப்பட்டது. தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக
அறியப்படாமல் இருக்கும் சிறந்த படைப்புகளுள் ஒன்றாக இவ்வரைபடப் புனைவும்
அமைந்துவிட்டது துரதிஷ்டவசமானது.
1969-இல் ஈரானில் பிறந்து,
அங்கும் தொடர்ந்து வியன்னாவிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்த மர்ஜானே, பின்னர் பிரான்ஸ்
நாட்டின் ஸ்ட்ராஸ் போர்க் நகரில் உள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்ந்து
படித்தார். முற்போக்கான சிந்தனையைக் கொண்ட குடும்பப் பின்னணியிலிருந்து வந்த
மர்ஜானே,
தனது பள்ளிப்
பருவம்முதல் உயர் கல்வி பயில்வதற்காகப் பிரான்ஸ் செல்லும் காலம் வரையிலுமான தன் சொந்த அனுபவங்களையே
இவ்வரைபடப் புனைவாக வடித்திருக்கிறார்.
இஸ்லாமியப்
புரட்சி, ஈராக்
- ஈரான் இடையேயான போர்,
மத அடிப்படைவாதம்,
பெண்கள்மீதான மதம் சார்ந்த ஒடுக்குமுறை எனப் பலவும் மர்ஜானே வாழ்வில் நிகழ்த்திய
தாக்கங்களும் அத்தாக்கங்களுக்கு எதிரான அவரது எதிர்வினைகளுமே இப்படைப்பின் கருப்பொருளாகியுள்ளன.
ஈரானில்
மர்ஜானேவுக்குக் கிடத்த பள்ளி பருவ அனுபவங்கள் (ஈரான் ஒரு குழந்தைப் பருவத்தின் கதை)
முதல் தொகுதியாகவும், பின்னர் பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்காக ஆஸ்திரியாவிலுல்ள வியன்னாவுக்குச்
சென்றது முதல் மீண்டும் ஈரான் திரும்பும்வரையிலான அனுபவங்கள் (ஈரான்-திரும்பும் காலம்) இரண்டாம் தொகுதியாகவும்
அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த குழந்தைகள் இலக்கியப் படைப்பளியான மர்ஜானேயின் படைப்பாளுமை
முதல் தொகுதியிலும், அவரது பெண்ணிய தத்துவார்த்தப் பின்புலம் இரண்டாம் தொகுதியிலும்
என இரு வகையில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
தேர்ந்த ஓவியரான ஆசிரியரே இப்படைப்புக்கான வரைபடங்களை வரைந்துள்ளார். படங்களுக்கும்
புனைவுக்கும் இடையே இழையோடும் பொருத்தப்பாட்டிற்கு இதுவே காரணம்.
பொது வாசகர் ஒருவரின் மூளையில் படிந்திருக்கும் ஈரான்பற்றிய கற்பிதங்களுக்கும் மர்ஜானே காட்ட முயலும் ஈரானுக்கும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
சிறந்த படைப்பொன்றிற்கு வாய்க்கும் நல்ல மொழிபெயர்ப்பு, மூலத்திற்கு இணையான
தாக்கத்தை,
மொழிபெயர்ப்பை
வாசிக்கும் வாசகர்களிடத்திலும் ஏற்படுத்திவிடும் என்பதற்கு இம்மொழிபெயர்ப்பும் ஒரு
நல்ல சான்று.
(மாற்றுவெளி ஆய்விதழ் - 9 தமிழ்ச் சித்திரக்கதை சிறப்பிதழில் நூல் அறிமுகம் பகுதியில் வெளிவந்தது. பக். 148, 149)
Comments
Post a Comment